

டெல்லியில் நேற்று முன்தினம் இரவு 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு டெல்லியில் விஷ்ணு கார்டன் பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் போலீசார் உள்ளிட்டோர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இடிபாடுகளில் சிக்கி யிருந்த 3 பெண்களின் சடலம் மீட்கப் பட்டது. மேலும் காயங்களுடன் 8 பேர் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து மேற்கு டெல்லி காவல் துறை இணை ஆணையர் தீபேந்திர பதக் நேற்று கூறும்போது, “இன்னும் ஒரு சிறுமி இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எனவே, மீட்புப் பணி 2-வது நாளாக நடைபெறு கிறது. காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இத்துடன் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித் துள்ளது” என்றார்.
இதுகுறித்துபோலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்துக்கு பாஜக வசம் உள்ள தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம்தான் பொறுப்பு என ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதை மறுத்துள்ளது.