

கர்நாடக லோக் ஆயுக்தாவில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக பாஜக, மஜத, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நீதிபதி பாஸ்கர் ராவ் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக லோக் ஆயுக்தாவின் நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ் வின் ராவ், விசாரணை அதிகாரி சோனியா நரங் பெயரைக் கூறி மூத்த ஐஏஎஸ் அதிகாரியிடம் ரூ.1 கோடி லஞ்சம் கேட்டதாக தகவல் வெளியானது. மேலும் அஸ்வின் ராவ் லோக் ஆயுக்தாவின் பணியாற் றும் முக்கிய அதிகாரிகளுடன் சோதனை நடத்தாமல் இருக்க ரூ. 100 கோடி வரை லஞ்சம் வாங்கி இருக்கலாம் என புகார் எழுந்தது. இதையடுத்து அஸ்வின் ராவ் மற்றும் 3 முக்கிய அதிகாரிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஊழல் புகாரில் சிக்கியுள்ள நீதிபதி பாஸ்கர் ராவ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அஸ்வின் ராவ் மற்றும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, மஜத, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளன. பல்வேறு சமூக நல அமைப்பினரும், கன்னட அமைப்பினரும், வழக்கறிஞர் சங்கங்களும் லோக் ஆயுக்தா அலுவலகத்தை முற்றுகையிட்டு, சிபிஐ விசாரணைகோரி போராட் டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்களும், கர்நாடக உயர்நீதிமன்ற வழக் கறிஞர்கள் நீதிபதி பாஸ்கர் ராவின் வீட்டை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பெலகாவியில் நடைபெற்று வரும் கர்நாடக சட்ட பேரவைக் கூட்டத்தொடரை பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை பேரவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக எழுந்து லோக் ஆயுக்தாவில் எழுந்துள்ள ஊழல் புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியதால் அவை முடங்கியது.
நீதிபதி பாஸ்கர் ராவுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால் முதல்வர் சித்தராமையா, சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக ஆளுநர் வாஜூபாய் வாலாவிடமும் தொலைபேசி மூலம் பேசியதாக தெரிகிறது.
அரசியல் கட்சிகள், வழக்கறி ஞர் சங்கங்களின் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள நீதிபதி பாஸ்கர் ராவ் நேற்று பெங்களூ ருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெளியேறினார். மேலும் லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு வருவதையும் நிறுத்திவிட்டார். உடனடியாக ராஜினாமா செய்தால் மட்டுமே சிபிஐ விசாரணையில் இருந்து தப்பிக்க முடியும். எனவே ராஜினாமா முடிவை நீதிபதி பாஸ்கர் ராவ் இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.