

போலி கல்விச் சான்றிதழ் வழக்கில், டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமருக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி திரிநகர் எம்எல்ஏ ஜிதேந்திர சிங் தோமர், ஆம் ஆத்மி அரசின் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவர் பிஹார் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்ததாக, கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்திருந்தார்.
அச்சான்றிதழ் போலியானது என டெல்லி பார் கவுன்சில் புகார் தெரிவித்தது. இதையடுத்து, அவர் கடந்த ஜூன் 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாமீன் கோரி தோமர் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீ வாஸ்தவா எதிர்ப்புத் தெரிவித்தார்.
எனினும், ‘முன்கூட்டி அனுமதி பெறாமல் டெல்லியை விட்டு வெளியே செல்லக்கூடாது, தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு நீதிபதி விமல்குமார் ஜாமீன் அளித்தார்.
மேலும், ரூ.50,000 ரொக்கத்தை பிணையமாக செலுத்த உத்தரவிட்டார். முன்னதாக அவரது ஜாமீன் மனுவை குற்றவியல் நீதிமன்றம் இருமுறை நிராகரித்திருந்தது.