

“காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை விட, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு அதிக பலனை கொடுக்கும்” என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், பாஜக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. இதற்கான மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், இப்பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நிலம் கையகப்படுத்தும் மசோதாவை விரைவில் நிறைவேற்ற நினைக்கிறோம். ஏனெனில், யாருடைய உரிமைகளையும் நாங்கள் மறுக்கவில்லை. மேலும், கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தைவிட, இப்போது திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவால், விவசாயிகளுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்" என்றார்.
அமைச்சர் சீதாராமன் மேலும் கூறும்போது “மசோதாவில் உள்ள சில பிரிவுகளை மிக கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், மசோதாவில் கூறப்பட்டுள்ள திருத்தங்கள் தேவைதான் என்று சில மாநில அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த நிலம் தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் எங்கு போய் நாம் வளர்ச்சியை ஏற்படுத்துவது” என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா, தற்போது 30 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. இக்குழு பல தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இக்குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.