Published : 06 Jul 2015 05:12 PM
Last Updated : 06 Jul 2015 05:12 PM

என்னை முடக்க அரசு கையாண்ட வழிதான் சிறை- சொல்கிறார் பேராசிரியர் சாய்பாபா

ராணுவத் தாக்குதலுக்கு எதிராக மிகவும் தீவிரமாக இவர் தேசிய அளவில் கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தார். இவர் ஒருங்கிணைத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆதிவாசிப் பகுதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றனர்.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டு, 14 மாதங்கள் நாக்பூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்த ஆங்கில பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு நேர்காணல் அளித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம் இவருக்கு 3 மாதங்கள் ஜாமீன் அளித்துள்ளது. பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக மருத்துவர்களைச் சந்திக்க இவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. சிறையில் இவரது ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டது குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்த விவரங்களைச் சுட்டிக் காட்டி, சமூக ஆர்வலர் பூர்ணிமா உபாத்யாய தலைமை நீதிபதிக்கு எழுதிய மின்னஞ்சலை ஒரு மனுவாகக் கருதிய உயர் நீதிமன்றம், பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு கேம்பஸில் அவரது இல்லத்தில் சக்கர நாற்காலியுடன் வளைய வரும் சாய்பாபா, "குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சி, உயிர்ப்பு காணாமல் போய்விட்டது. எங்கள் அனைவருக்கும் இது ஒரு துன்பகரமான அனுபவம், மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய எத்தனை காலம் ஆகும் என்பது தெரியவில்லை" என்று கூறினார்.

1990-ம் ஆண்டுகளில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் சமூக செயல்பாட்டாளராக இருந்த சாய்பாபா, 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில் ஆந்திர போலீஸின் என்கவுன்டர் கொலைகளை எதிர்த்துப் போராடினார். என்கவுன்டர் என்ற பெயரில் ஆந்திர போலீஸ் அப்பாவிகளையும், நக்சலைட்டுகளையும் கொன்று குவித்தது என்பதே இவரது வாதம்.

அதாவது, அரசு உருவாக்கிய குண்டர் படையினரால் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறார். "நான் 10 ஆண்டுகளில் 10 சமூக ஆர்வல நண்பர்களை என்கவுண்டரில் இழந்துள்ளேன். இவர்கள் செய்த தவறு, நக்சலைட்டுகளைக் கொலை செய்வதை எதிர்த்ததே. மேலும் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்களைக் கோரி, அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்தனர் என்பதே. இது அரசுக்கு சரியான விஷயமாகப் படவில்லை" என்கிறார் சாய்பாபா.

அதன் பிறகு டெல்லிக்கு சென்ற பேராசிரியர் சாய்பாபா, பழங்குடியினர் பகுதியில் ராணுவத்தினரின் செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டார். இதனால் அப்பகுதிகளில் முதலீடு பெருமளவு பாதிக்கப்பட்டது. எனவே "என்னை முடக்க ஒரே வழி, என்னை சிறையில் தள்ளுவதே என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டது" என்றார்.

2000-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பேராசிரியர் சாய்பாபா, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

செப்டம்பர் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு 'பசுமை வேட்டை' நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதாவது பழங்குடியினர் பகுதிகளிலிருந்த மாவோயிஸ்ட்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை அது. அப்போது ஆதிவாசிகளின் நலனுக்காக செயல்படத் தொடங்கினார் சாய்பாபா.

"நான் அனைத்து ஆதிவாசி மாவட்டங்களுக்கும் சென்று வந்தேன். என்னைப்போன்ற உடல் ரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு அது ஒன்றும் பெரிய கடினமான காரியமாக இருக்கவில்லை. ஆதிவாசிகள் தங்கள் தோள்களில் என்னைச் சுமந்து சென்றனர், இப்படித்தான் செல்லக் கடினமான மலைப்பகுதிகளுக்கும் சென்றோம்.

ஆளும் கட்சிகள் அவர்களது வாழ்வாதாரங்களை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. அது எதற்காக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இதற்கான ஆதாரங்களை நான் திரட்டினேன். எனவே பசுமை வேட்டை என்ற நடவடிக்கையே, ஆதிவாசிகளை முடக்கி, கொலை செய்து, அம்மனிதர்களை அப்புறப்படுத்துவதேயாகும்" என்கிறார்.

2009-2013-ம் ஆண்டுகள் இடையே வெகுஜன அறிவுஜீவிகளை 'மக்களுக்கு எதிரான போரை எதிர்க்கும் அமைப்பு' மூலம் ஒன்றிணைத்ததாகத் தெரிவித்தார் சாய்பாபா.

ராணுவத் தாக்குதலுக்கு எதிராக மிகவும் தீவிரமாக இவர் தேசிய அளவில் கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தார். இவர் ஒருங்கிணைத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆதிவாசிப் பகுதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில், 2014 மே மாதம் 9-ம் தேதி, மதிய உணவுக்காக பேராசிரியர் சாய்பாபா வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சாதாரண உடையில் வந்த போலீஸார் சிலர் இவரது காரை வழிமறித்து ஓட்டுநரை வெளியேற்றி இவரை பல்கலைக் கழக வளாகத்திலிருந்து வெளியேற்றினர். டெல்லியில் கைது செய்யப்பட்ட இவர் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நீதிபதி இவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.



"என்னுடைய பென் டிரைவில் மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலரின் செய்தியாளர்களுக்கான அறிக்கையை போலீஸார் கண்டுபிடித்தனர். இன்னொரு சாட்சியம் என்னவெனில், மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதம் என்றனர். ஆனால் இன்று வரை அந்தக் கடிதத்தை என்னிடம் அவர்கள் காட்டவேயில்லை.

கைது செய்து நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபா, 72 மணி நேரம் சிறை கழிப்பறையை பயன்படுத்த அனுமதி தரப்படவில்லை. முட்டை வடிவ சிறையில் அவர் கடும் துன்பங்களை அனுபவித்தார். இது அவருடைய ஆரோக்கியத்தைப் பாதித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x