டிசம்பர் 16 சம்பவத்தை விட குரூரமானது உ.பி சகோதரிகள் பலாத்காரம்: சிறுமியின் தந்தை வேதனை

டிசம்பர் 16 சம்பவத்தை விட குரூரமானது உ.பி சகோதரிகள் பலாத்காரம்: சிறுமியின் தந்தை வேதனை
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம், டிசம்பர் 16 ல் நடந்த சம்பவத்தை விட குரூரமானது என பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு பலியான சிறுமியின் தந்தை கூறி உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் படான் கிராமத்தில், தலித் சகோதரிகள் இருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இருவரையும் ஊர் மத்தியில் இருந்த மாமரத்தில் கையிற்றில் தொங்கவிட்டனர். இதில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் உத்தர பிரதேசம் மட்டும் அல்லாது நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

உத்தர பிரதேச மாநிலம் உஷைத் கிராமத்தைச் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27-ம் தேதி இரவு காணாமல் போயினர்.

இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல்துறை பதிவு செய்ய மறுத்தது. 28-ம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல்களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

உயிரிழந்த ஒரு சிறுமியின் தந்தை கூறுகையில், “காவல்துறையின் உதவியை நாடினோம். அதில் ஒரு காவலர் இரண்டு மணி நேரத்தில் சிறுமிகள் வீடு திரும்பி விடுவார்கள் எனத் தெரிவித்தார். ஆனால், தூக்கில் தொங்கிய நிலையில்தான் அவர்கள் எங்களுக்கு கிடைத்தனர். இந்த சம்பவம் டெல்லியில், டிசம்பர் 16-ம் தேதி நடந்த சம்பவத்தை விட கொடூரமானது.

இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் மக்கள் முன்னே தூக்கிலிட வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஊர் மக்கள் முன்னே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தனர். அது போல அவர்களை மக்கள் முன் தண்டிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்களில் இனியும் யாரும் ஈடுப்படக் கூடாது என்று எச்சரித்துள்ளார். உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு, மாநில அரசு சார்பாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை

இந்த நிலையில் சிறுமியின் தந்தை, தனக்கு மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு நிவாரணம் தந்து ஈடு செய்யமுடியாது, நியாயம் மட்டுமே வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி ஆறுதல்

பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்து அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்தார்.

இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகள் காணாமல் போனது குறித்த புகாரை அலட்சியப்படுத்திய சர்வேஷ் யாதவ் மற்றும் சத்திரபால் யாதவ் என்ற் இரண்டு போலீசாரும் இதில் அடங்குவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in