

ஆயுதப்படைகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு அடுத்த சில மாதங்களில் பல்வேறு முடிவுகள் எடுக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.
பஞ்சாப் மாநில அரசு சார்பில், ஆயுதப் படைகளில் சேரவிரும்பும் பெண்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் மொகாலியில் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பின், பஞ்சாபில் முதல் நிகழ்ச்சியாக இந்த பயிற்சி மையத்தை நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது, “நாட்டின் ஆயுதப் படைகளில் 3,298 பெண்கள் மட்டுமே பணியாற்றி வருவது எனக்கு சற்று வருத்தமாக உள்ளது. ஆயுதப் படைகளில் பெண்கள் அல்லது மாணவிகளின் பங்கேற்பை அதிகரிக்க, அடுத்த சில மாதங்களில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும்.
ஆயுதப் படைகளில் பெண்கள் பெருமளவில் சேரவேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கு தடையாக உள்ள அம்சங்கள் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்த ஆய்வுக்குப் பின் அடுத்த சில நாட்களில் அரசு உரிய முடிவுகள் எடுக்கும். ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கும்” என்றார்.