

ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலை மறுக்க முடியாது என்று சன் குழும சேனல்கள் விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி தெரிவித்துள்ளார்.
சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்த விவகாரத்தில், ஊழல்களை அடிப்படையாகக் கொண்டு சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவிக்க முடியாது என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, சன் குழுமத்துக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் மறுத்ததை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சட்ட அமைச்சகத்தை இது தொடர்பாக தெளிவு பெற அணுகியுள்ளது.
இந்த நிலையில், ஊழல்கள் தொடர்பாக புலனாய்வு கழகங்கள் விசாரித்து வருகிறது, பாதுகாப்பு தொடர்பாக அல்ல, இதனால் சன் குழும சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்கலாம் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஒப்புதல் மறுப்புக்கு ஊழல் என்பது ஒரு அடிப்படையாக அமைய முடியாது என்கிறார் அவர்.
இந்த விவகாரம் தொடர்வாக இரு அமைச்சகங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால், அட்டர்னி ஜெனரலின் கருத்து ஏற்கப்படும், ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டேயாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இந்த விவகாரம் இருதுறை அமைச்சகக் குழுவிடம் அனுப்பப்பட்டு இறுதி முடிவு எட்டப்படலாம் என்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்த சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு உருவானது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு சன் குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் சன் குழுமத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்துகு சன் குழும தலைவர் கலாநிதி மாறன் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், தேச விரோத புகாரோ, கிரிமினல் புகார்களோ எதுவும் இல்லாத நிலையில், சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலுக்கு மறுப்பு தெரிவித்தற்கான நியாயப்பாடு எதுவும் இல்லை என்றும், சன் குழுமம் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், இதனால் ஒப்புதல் வழங்க வேண்டுமாறும் அவர் கோரியிருந்தது கவனிக்கத்தக்கது.