

உத்தரப் பிரதேச அமைச்சரின் ஊழல் விவகாரங்களை பேஸ் புக்கில் வெளியிட்ட பத்திரிகை யாளர் எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அமைச்சர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.
உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜகேந்திர சிங். இவர் பிரபல பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து அவர் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு வந்தார்.
சுரங்க முறைகேடு, நில அபகரிப்பு உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்களில் அமைச்சர் ஈடுபட்டு வருவதை ஜகேந்திர சிங் தனது செய்திகளின் மூலம் அம்பலப்படுத்தினார். இந்தச் செய்திகளை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றம் செய்து வந்தார்.
அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா சொந்த கட்சிக்கே துரோகம் செய்கிறார் பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக ஜகேந்திர சிங்கை அவரது வீட்டில் போலீஸார் கைது செய்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது ஜகேந்திர சிங் மர்மமான முறையில் தீப் பிடித்து எரிந்தார். அமைச்சருக்கு ஆதரவான போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை தீ வைத்து கொளுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட ஜகேந்திர சிங் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
முன்னதாக அவர் அளித்த வாக்குமூலத்தில், அமைச்சரின் ஆட்கள் தன்னை தீ வைத்து கொளுத்தியதாகத் தெரிவித் துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக புவாயன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் உட்பட 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.