

ஜூன் 2-ம் தேதிக்குப் பிறகு அமையவுள்ள ஆந்திர (சீமாந்திரா) சட்டமன்றத்தில் வெறும் 3 கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே இடம் பெறுவார்கள்.
சீமாந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 102 தொகுதிகளை தெலுங்கு தேசம் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் கூட்டணிக் கட்சியான பாஜக 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்து பெறவுள்ளது.
இந்த 3 கட்சிகளை தவிர, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லோக் சத்தா, ஜெய் ஒருங்கிணைந்த ஆந்திரா உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் அவை ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மட்டும் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே கட்சி ரீதியாகப் பார்த்தால் வெறும் 3 கட்சிகளுக்கு மட்டுமே சட்டமன்றம் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.