

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகை யாளர் ஜகேந்திர சிங் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் என்று மாநில போலீஸார் தாக்கல் செய்துள்ள தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஜகேந்திர சிங் தானே தீ வைத்துக் கொண்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, அவரது உடலின் கீழ் பாதியில் தீக்காயங்கள் உள்ளன” என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இதன்மூலம் மாநில அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானது என தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜகேந்திர சிங்கின் குடும்பத்தினரை சந்தித்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், ரூ. 30 லட்சம் இழப்பீடும் இரண்டு மகன்களுக்கு வேலையும் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஷாஜகான்பூரில் இம்மாதம் 1-ம் தேதி ஜாகேந்திர சிங் என்ற பத்திரிகையாளர் அவரது வீட்டில் போலீஸ் மற்றும் குண்டர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். கடந்த 8-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது மரணத்துக்கு அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவே காரணம் என்று வாக்குமுலம் அளித்திருந்தார்.
ஆளும் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சர் வர்மாவின் சட்டவிரோத சுரங்க செயல்பாடுகள் மற்றும் நில ஆக்கிரமிப்புகள் குறித்து பேஸ்புக்கில் ஜகேந்திர சிங் தொடர்ந்து எழுதி வந்தார். இந்நிலையில் அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே ஜகேந்திர சிங் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக ஜகேந்திரா வின் மகன் ராகவேந்திரா அளித்த புகாரின் பேரில் அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா மற்றும் 5 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது மத்திய, மாநில அரசுகள் 2 வாரங் களில் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.