பாஜக மீதான சர்ச்சைகள் அதிகரிப்பு: காரணம் அறிய கூட்டணி கட்சியான சிவசேனா வலியுறுத்தல்

பாஜக மீதான சர்ச்சைகள் அதிகரிப்பு: காரணம் அறிய கூட்டணி கட்சியான சிவசேனா வலியுறுத்தல்

Published on

பாஜக தொடர்பாக கடும் சர்ச்சைகள் எழுந்திருப்பது ஏன் என்பதை விரிவாக ஆராய வேண்டும் என்று அதன் கூட்டணி கட்சியான சிவசேனா வலியுறுத்தியுள்ளது. சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் இடம்பெற்றுள்ள தலையங்கத்தில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:

பாஜக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது ஏன் என்பதை விரிவாக ஆராய வேண்டும். அமைச்சர்கள் மீதான புகார்களால் எழுந்துள்ள இந்த சர்ச்சையின் நோக்கம் அரசின் லட்சியத்துக்கு தடை போடுவதற்கான சதித்திட்டமாக இருக்கலாம்.

மகாராஷ்டிராவிலும் மத்தியி லும் பாஜக சிக்கலில் உள்ளது. மத்திய அரசு நிலையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் தள்ளிவிடலாம். அவற்றை கவனித்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா போன்ற பெருந்தலைவர்கள் இருக்கிறார்கள்.

விடை தெரிய வேண்டும்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு, மாநிலத்தில் கட்சியில் எழுந்துள்ள பிரச்சினைகளை சமாளிப்பது கடினமானதாகவே இருக்கும். தினசரி யார் மீதாவது புதுப்புது புகார்கள் வருகின்றன. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ள ஓராண்டில் அடுத்தடுத்து சர்ச்சை வெடிப்பது எதற்காக என்பதற்கு விடை தெரிந்தாக வேண்டும்.

மாநில குடிநீர் விநியோகத் துறை அமைச்சர் பாபன்ராவ் லோனிகர் மற்றும் கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே மீது போலி பட்டச்சான்று புகார் சுமத்தப்பட்டுள்ளது. அதையடுத்து பாஜகவுக்கு பிரச்சினை உருவானது. இப்போது மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே டெண்டர் கோராமல் ஒப்பந்தங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வினோத் தாவ்டே, பங்கஜா முண்டே ஆகிய இருவரும் எதிர்காலத்தில் முதல்வர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர் களாக இருப்பவர்கள். இந்த கோணத்தில் அலசினால் அவர்களது லட்சியத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான அரசியலாக இந்த சர்ச்சைகள் எழுகின்றனவோ என்று யோசிக்க வேண்டி உள்ளது.

பட்னாவிஸ் திறமையான முதல்வர். எதிர்க்கட்சிகள் சுமத் தும் புகார்களால் சலிப்படைந்து ஓதுங்கிவிடக் கூடியவர் அல்ல அவர், தமது அமைச்சர்களுக்காக துணை நிற்கக் கூடியவர். மாநிலத்தை திறம்பட நிர் வகித்து தூய்மையான அரசி யலை தரக்கூடியவர். என்று சிவசேனா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in