Published : 02 Jun 2015 04:55 PM
Last Updated : 02 Jun 2015 04:55 PM

மத்திய ரிசர்வ் வங்கி சியர் லீடர் அல்ல: ரகுராம் ராஜன்

மத்திய ரிசர்வ் வங்கி என்பது சந்தைகளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ‘சியர் லீடர்’ (உற்சாகமூட்டும் கலைஞர்கள்) அல்ல என்று அதன் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரகுராம் ராஜன், முதலீடு வளர்ச்சி குறித்த கவனத்தில் சற்றே தவறிழைத்து விட்டது என்றும், வட்டி விகிதக் குறைப்பு அந்த வகையில் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5% எனும் போது எதற்காக வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்? எனவே, வளர்ச்சி விகிதம் என்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் பலவீனமாகவே ஜிடிபி வளர்ச்சி இருக்கலாம் என்று அவர் சூசகமாக தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூறப்படும் விகிதத்துக்கும், நுகர்வோர் தேவையில் தெரியும் அளவுக்கு பெரிதான முன்னேற்றம் இல்லாத நிலையில் கார்ப்பரேட் வருவாய்க்கும் இடையில் “முரண்பாடு” இருப்பதையும் ரகுராம் ராஜன் சுட்டிக் காட்டினார்.

“ஒரு விதத்தில் இது கோல்டிலாக்ஸ் கொள்கையே, நடப்பு சூழ்நிலைக்கு சரியானதுதான்” என்கிறார் ரகுராம் ராஜன். கோல்டிலாக்ஸ் பொருளாதாரம் என்பதன் அடிப்படை என்னவெனில், குறைந்த பணவீக்க விகிதத்துடன் மிதமான பொருளாதார வளர்ச்சி என்பதே கோல்டிலாக்ஸின் ஒரு எளிய புரிதல்.

இந்த ஆண்டில் 3-வது முறையாக வட்டிவிகிதம் 0.25% குறைக்கப்பட்டது ஓரளவுக்கு சரியானது தான் என்று கூறும் அவர், பருவமழையின் மந்தம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சீராக உயர்ந்து வருவதும் பணவீக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்று கவலையையும் வெளியிட்டுள்ளார்.

“மத்திய ரிசர்வ் வங்கி என்பது சியர் லீடர் அல்ல. பணவீக்க விகிதாசாரத்தில் தாக்கம் செலுத்தும் ரூபாய் மதிப்பு விஷயத்தில் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதே எங்கள் பணி, அந்த நம்பிக்கையை உருவாக்கிய பிறகே நல்ல முடிவுகள் எடுக்கப்படுவதற்கான நீண்டகால சட்டகத்தை உருவாக்க முடியும்.

ஒவ்வொரு முறை ஏற்றுமதியாளர்கள் என்னிடம் அவர்களுக்கு முடிவுகள் எடுக்க மிக நிலைத்தன்மை முக்கியமானது என்று கூறும் போதும் எங்களது பணி சியர் லீடர்களாக இருப்பது அல்ல என்ற எனது பார்வையை மீண்டும் என்னுள் செலுத்துகிறது” என்றார்.

வட்டி விகிதம் ஏன் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

“முதலீடுகளை ஊக்குவிக்க கவனம் செலுத்துவதில் நாங்கள் சற்றே தவறிழைத்து விட்டோம். ஏனெனில், நிறுவனங்களின் சமீபத்திய வருவாயைப் பார்க்கும் போது அடிமட்ட அளவில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும், நுகர்வோர் தேவையும் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை என்பதும் தெரிகிறது.

எனவே, இந்த வட்டி விகித குறைப்பு, மிகவும் சிக்கனமானதும் அல்ல. அதேசமயத்தில் தீவிரமானதும் அல்ல, தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதே” என்றார்.

மேலும், அரசின் நெருக்கடி காரணமாக இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று கூறிய ரகுராம் ராஜன், தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதே என்றார்.

"நான் வட்டி விகிதத்தை குறைத்தால் நான் அரசை திருப்தி செய்கிறேன், வட்டி விகிதத்தை குறைக்காவிட்டால் அரசுடன் மோதல் போக்கு கொண்டுள்ளேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அப்படியல்ல.

பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த எங்களுக்கு எந்த அளவுக்கு செயல்பட இடமிருக்கிறதோ அதனைப் பயன்படுத்த நினைக்கிறோம். பொருளாதாரம் குறிப்பாக முதலீடு அதிகரிக்கிறது, நன்றாக இருக்கிறது என்ற மாயையில் நாங்கள் இல்லை. அப்படியல்ல, அதற்கு ஆதரவுக்கரம் தேவை” என்றார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x