

சிபிஐ கூடுதல் இயக்குநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1980-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது தமிழக சீருடை பணியாளர் தேர் வாணைய இயக்குநர் ஜெனரலாக அவர் பணியாற்றி வந்தார். இதை யடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி சிபிஐ கூடுதல் இயக்கு நராக அர்ச்சனா பொறுப்பேற்றார். ஆனால், விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி அவரை அதேநாளில் தமிழக அரசு இடைக்கால பணிநீக்கம் செய்தது.
இதற்கிடையில், சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின், அர்ச்சனா நியமனத்தை எதிர்த்து பத்திரிகையாளர் வினீத் நாராயண் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அர்ச்சனாவுக்கு சிபிஐ.யில் எந்தப் பணியும் ஒதுக்கப்படவில்லை. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சிபிஐ கூடுதல் இயக்குநர் பணியில் இருந்து அர்ச்சனா மாற்றப்பட்டு, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (என்சிஆர்பி) இயக்குநராக நியமிக்கப்பட்டுள் ளார். இதற்கு பணி நியமனத்துக் கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
எனினும், உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்கு இந்த பணியிட மாற்றம் கட்டுப்படும் என்று இட மாற்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அர்ச்சனா பணியிடம் மாற்றப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிக்க, அப்போதைய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பரிந்துரை செய்தார். ஆனால், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் மத்திய உள்துறை செயலர் ஆகியோர் வேறு ஒரு அதிகாரியின் பெயரைப் பரிந்துரைத்திருந்தனர். அந்தப் பெயரை பரிசீலிக்கவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.