

ராஜஸ்தானில் 35 வயது ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் 6 வயது சிறுமியை மணந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சித் தோர்கார் மாவட்டம், கங்காரார் ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர் ரத்தன் ஜாட் (35). இவர் இந்த வார தொடக்கத்தில், பண் டோலி என்ற கிராமத்தில் 6 வயது சிறுமியை ரகசிய திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் நேற்று முன் தினம் ‘வாட்ஸ் ஆப்’-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் சித்தோர்கார் மாவட்ட ஆட்சியர் வேத பிரகாஷ் நேற்று கூறும்போது, “ரத்தன் ஜாட் குழந்தைத் திருமண குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு அவரும் சிறுமியின் குடும்பத்தினரும் உடனே தப்பிச் சென்றுவிட்டனர். கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து பேச மறுக்கின்றனர். இத்திருமணம் செல்லாது என அறிவிக்குமாறு திங்கள்கிழமை நீதிமன்றத்தை அணுக உள்ளோம்” என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் காமேஸ்வரா கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்கள் குழு வெள்ளிக்கிழமை அறிக்கை தயாரித்தது. இதன் அடிப்படையில் ரத்தன் ஜாட் மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு எதிராக கங்காரார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும். தலைமறைவாக உள்ள ரத்தன் ஜாட்டை விரைவில் கைது செய்வோம்” என்றார்.