

வரும் 15-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதற்குமான ரோமிங் கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல் வாடிக்கை யாளர்களுக்கு தேசிய ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. வரும் ஜூலை முதல் முழுமையான ‘மொபைல் போர்ட்ட பிளிட்டி’ வழங்கப்படும். பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இரண்டுமே நட்டத்தில் இயங்குகின்றன. 2004-ம் ஆண்டு பிஎஸ்என்எல் ரூ.10 ஆயிரம் கோடி லாபமீட்டியது. ஆனால், 2014-ம் ஆண்டு நான் பொறுப்பேற்ற போது அந்நிறுவனம் ரூ.7,500 கோடி நட்டத்தில் இயங்கியது. 2008-ம் ஆண்டு லாபத்தில் இயங்கிய எம்டிஎன்எல் நிறுவனம் அதன் பிறகு நட்டத்தில் இயங்கி வருகிறது. ஆனால், தற்போது எம்டிஎன்எல் மீண்டு வருகிறது. இந்நிறுவனங்களின் நட்டத்துக்கு அமைச்சகத்தில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
கால்டிராப் எனப்படும் அழைப்பு கள் அடிக்கடி துண்டிக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காண சம்மந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன. இணைய சம உரிமை தொடர்பான அறிக்கை அரசுக்கு கிடைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் அந்த அறிக்கை தொலைத்தொடர்புத்துறை இணையதளத்தில் வெளியிடப் படும். அதன் நகல் டிராய்க்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலவச ரோமிங் தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் இதுதொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது இலவச ரோமிங் அறிவிக்கப்பட்டுள்ளது.