வன்முறையில் இறந்த இளைஞரின் உடல் தகனம்: ஜம்முவில் பதற்றம் நிலவுவதால் ராணுவ வீரர்கள் குவிப்பு - சீக்கியர்களின் கோரிக்கைகளை ஏற்றது மாநில அரசு

வன்முறையில் இறந்த இளைஞரின் உடல் தகனம்: ஜம்முவில் பதற்றம் நிலவுவதால் ராணுவ வீரர்கள் குவிப்பு - சீக்கியர்களின் கோரிக்கைகளை ஏற்றது மாநில அரசு
Updated on
1 min read

ஜம்முவில் போலீஸுக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த மோதலில் இறந்த இளைஞரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இங்கு பதற்றம் நிலவுவதால், ராணுவ வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் மறைந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் 31-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துடன் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதை போலீஸார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாழக்கிழமை சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை ஏற்பட்டது. போலீஸாருக்கும் சீக்கியர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் சீக்கிய இளைஞர் ஜக்ஜித் சிங் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் ஜம்முவில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இங்கு பதற்றம் நிலவுவதால் ராணுவ வீரர்கள் ஜம்முவின் பல பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பதற்றம் நிறைந்த மிரான் சாகிப், வன்முறை நடந்த சட்வாரி, டிஜியானா, தலாப் டில்லோ, பக் ஷி நகர், ரெஹாரி உட்பட பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். பதற்றத்தை தணிக்க போலீஸ் அதிரடிப் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜம்முவில் இப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தப் பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததாக தகவல் வரவில்லை. பதற்றம் நிறைந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.

இதற்கிடையில் சீக்கியர்கள் முன்வைத்த பல கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட போலீஸ் தலைவர் (எஸ்எஸ்பி) உத்தம்சந்த் இடமாற்றம் செய்யப்பட்டார். வன்முறை நடந்த சட்வாரி போலீஸ் நிலைய அதிகாரி குல்பீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வன்முறையின் போது இறந்த ஜக்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க அரசு ஒப்புக் கொண்டது.

இதுகுறித்து துணை முதல்வர் நிர்மல் சிங் கூறும்போது, “வன்முறை பெரிதான போது, தங்களை தற்காத்துக் கொள்ளவே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். எனினும், ஒட்டுமொத்த சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டி விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியாக இருந்த ஜம்முவில் சிலர் கலவரத்தை தூண்டி விட்டுள்ளனர்’’ என்றார்.

பதற்றம் நிலவுவதால், ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளி, வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், செல்போன் மற்றும் இணையதள சேவையும் ஜம்முவில் 2-வது நாளாக நேற்று நிறுத்திவைக்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in