Published : 17 Jun 2015 06:49 PM
Last Updated : 17 Jun 2015 06:49 PM

சுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதிலடியால் பரபரப்பு கூடும் லலித் மோடி விவகாரம்

லலித் மோடிக்கு விசா கிடைக்க வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய சர்ச்சை வலுத்து வரும் சூழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பது லலித் மோடி வாயிலாகவே தெரியவந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சுஷ்மா ஸ்வராஜுக்கு மத்திய அரசும், பாஜகவும் உறுதுணையுடன் செயல்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில், இந்த விவகாரத்தில் தினமும் முக்கிய அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைத் தொடர்ந்து இன்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

'லலித் மோடிக்கு காட்டப்பட்டது கருணையே'

லலித் மோடிக்கு விசா வழங்க சுஷ்மா ஸ்வராஜ் உதவியது கருணை அடிப்படையில்தான் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "இது ஏதோ பெரிய தவறு என்ற வாதத்தை நான் ஏற்கமாட்டேன். மனிதாபிமான காரணங்களுக்காக கருணை அடிப்படையிலான தலையீடே இது. ராஜஸ்தான் முதல்வர் விவகாரம் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுகிறது" என்றார்.

'நல்லவராகிவிட்டார் ப.சிதம்பரம்'

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது லலித் மோடி தொடர்பாக பிரிட்டன் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்களை வெளியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியது பற்றி ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "அதிகாரம் பறிபோன பின்பு சிதம்பரம் நல்லவராகிவிட்டார் என்று கருதுகிறேன்.

லலித் மோடி விவகாரம் குறித்து நிதியமைச்சர் ஜேட்லி ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார். இதில் நான் கூடுதலாகச் சேர்க்க ஒன்றும் இல்லை. லலித் மொடியின் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, மத்திய அரசு ஒரு வரையறைக்குட்பட்ட தலையீட்டை மனிதாபிமான அடிப்படையில் செய்தது" என்றார் அவர்.

சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்துடன் லலித் மோடிக்கு நெருக்கமான நட்பு உள்ளது என்றும், சுஷ்மாவின் கணவர் மற்றும் மகள் லலித் மோடிக்கு சட்ட உதவிகள் புரிந்துள்ளனர் என்றும் வசுந்தரா ராஜே எழுத்துபூர்வமாக பிரிட்டன் அதிகாரிகளுக்கு அளித்தார் என்று லலித் மோடி பேட்டி கொடுத்துள்ள விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அந்த பேட்டியை நான் ஓரளவுக்குப் பார்த்தேன். தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து இல்லை" என்றார்.

லலித் மோடி பரபரப்பு பேட்டி

முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சதிவேலை காரணமாகவே தனக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை லலித் மோடி முன்வைத்தார்.

அத்துடன், விசா பிரச்சினையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும்தான் தனக்கு உதவியதாக அவர் ஒப்புக்கொண்டார். அத்துடன், அவ்விருவர் உடனான நட்பு குறித்தும் அவர் விரிவாக பேசியது, இப்பிரச்சினையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

விசா பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு பாஜகவுக்கு சவால் விடுத்துவரும் நிலையில், முதன்முறையாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், லலித் மோடி இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. | அந்தப் பேட்டியின் முழு விவரம்:>எனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தராவும் உதவினர்- லலித் மோடி பேட்டி |

ப.சிதம்பரம் பதிலடி

லலித் மோடி தனது பேட்டியில், "எனது பாஸ்போர்ட் தவறாக முடக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐ.மு. கூட்டணி அரசின் காழ்ப்புணர்ச்சியால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். குறிப்பாக ப.சிதம்பரம் எனக்கு அதிகப்படியான நெருக்கடி அளித்தார். ஐ.பி.எல். சர்ச்சையில் சசி தரூர் பதவி விலகியதால் எனக்கு மேலும் நெருக்கடி அளிக்கப்பட்டது" எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "லலித் மோடி விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு இந்திய தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியானால் அவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும். உடனடியாக அந்தக் கடிதங்களை வெளியிடுக" என யோசனை தெரிவித்திருந்து பதிலடி தந்தார்.

விசாரணைக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

லலித் மோடிக்கு விசா வழங்க சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் மீது லலித் மோடி குற்றச்சாட்டை முன்வைக்க, ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

லலித் மோடியை இந்தியாவுக்கு வரவழைத்து அன்னியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவினரின் விசாரணைக்குக் கீழ் கொண்டு வர நரேந்திர மோடி அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கோரியுள்ளார்.

"லலித் மோடி பாஸ்போர்ட்டை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனு செய்ய வேண்டாம் என்ற முடிவை யார் எடுத்தார்கள்?" என்று ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.

பாஜக புது வியூகம்

இதனிடையே, சுஷ்மா பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இன்றும் போராட்டம் நடந்தது. அதேவேளையில், சுஷ்மாவுக்கு ஆதரவாக பாஜகவும் போராட்ட வடிவில் களமிறங்கியுள்ளது.

"ஒரு பெண் தலைவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் காங்கிரஸ் மகளிர் விரோத போக்கை கடைபிடிக்கிறது" என்று புதிய வியூகத்தில் பாஜக பதில் தரத் தொடங்கியுள்ளது. | அதன் முழு விவரம்: >காங்கிரஸ் 'மகளிர் விரோதப் போக்கு'- சுஷ்மா சிக்கலை புது வியூகத்தில் எதிர்கொள்ளும் பாஜக |

சர்ச்சையின் பின்னணி விவரம்:

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது கடந்த 2010-ல் ஊழல் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத் துறை அறிவித்தது. அவரது பாஸ்போர்ட் 2011 மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசிடம் கடந்த ஆண்டு விசா கோரி லலித் மோடி விண்ணப்பித்தார். இந்தியாவில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்தது. இதில் லலித் மோடிக்கு விசா கிடைக்க மத்திய அமைச்சர் சுஷ்மா உதவியதாக தகவல் வெளியானது.

இந்த தவறுக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. எனினும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுஷ்மாவுக்கு பக்கபலமாக உள்ளன. இதை, > மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x