Last Updated : 26 Jun, 2015 08:35 AM

 

Published : 26 Jun 2015 08:35 AM
Last Updated : 26 Jun 2015 08:35 AM

பங்கஜா மீதான ஊழல் புகாருக்கு ஆதாரம் இல்லை: பிரதமரை சந்தித்த மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் தகவல்

மகாராஷ்டிர மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே மீது எழுந்துள்ள ரூ.206 கோடி ஊழல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழல் புகார் எழுந்த பிறகு அமைச்சர் பங்கஜா முண்டே என்னை தொடர்புகொண்டு பேசினார். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட விரும்பினால் அதைச் செய்யுங்கள் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை நான் நேரடியாக கண்காணித்து வருகிறேன். அவரது நடவடிக்கையில் முரண்பாடு எதுவும் இல்லை. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ஐசிடிஎஸ்) திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கியிருந்த நிதி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாக இருந்தது. இதையடுத்து, புத்தகம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பங்கஜா முண்டே அனுமதி அளித்தார்.

மேலும், ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட தொகைக்கு கொள்முதல் செய்யும்போது இணையதளம் மூலம் டெண்டர் கோர வேண்டும் என்ற விதிமுறை ஏப்ரல் மாதம்தான் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, இந்த விதிமுறை இதற்கு பொருந்தாது.

இந்தப் பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பான தீர்மானத்தில் உள்ள அம்சங்களை இனிமேல்தான் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்குப் பிறகு முரண்பாடு இருந்தால் மட்டுமே விசாரணைக்கு உத்தரவிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊழல் தடுப்பு அமைப்பு நோட்டீஸ்

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சாவந்த் ஊழல் தடுப்பு அமைப்பில் (ஏசிபி) புகார் செய்தார். இந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு பங்கஜாவுக்கு ஏசிபி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளர் சஞ்சய் குமார் கூறும்போது, “ஏசிபி-யிடமிருந்து விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. கொள்முதல் குறித்த விவரத்தை கேட்டுள்ளனர். இதுகுறித்து அறிக்கை தயாரித்து வருகிறோம். அதை முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் விரைவில் சமர்ப்பிக்க உள்ளோம். பின்னர் ஏசிபிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

மாநிலம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்காக புத்தகம், உணவுப்பொருள், மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத் துக்கு டெண்டர் கோராமல் ஒரே நாளில் 24 அரசு தீர்மானங்கள் மூலம் பங்கஜா அனுமதி அளித்துள்ளார்.

ரூ.206 கோடி மதிப்பிலான இந்த கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவாண் கோரிக்கை வைத் திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x