வாஜ்பாய்க்கு வங்கதேச விடுதலைப் போர் விருது: பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்

வாஜ்பாய்க்கு வங்கதேச விடுதலைப் போர் விருது: பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்
Updated on
1 min read

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வங்கதேச விடுதலைப் போர் கவுரவ விருது டாக்காவில் நேற்று வழங்கப்பட்டது. வாஜ்பாய் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி விருதினைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த 1971-ல் நடைபெற்ற வங்க தேச விடுதலைப் போருக்கு ஆதர வாக வாஜ்பாய் தீவிரமாகச் செயல் பட்டார். அவரை கவுரவிக்கும் வகை யில் அந்த நாட்டு அரசு அண்மையில் வங்கதேச விடுதலைப் போர் விருதினை அறிவித்தது.

இந்த விருது வழங்கும் விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது விருதினை வழங்கினார். சில ஆண்டுகளாக வாஜ்பாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது சார்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருதினைப் பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், வாஜ்பாய்க்கு வழங்கப்பட்ட விருது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் கலந்துகொண்டார்.

வங்கதேச சுற்றுப்பயணத்தில் இரண்டாம் நாளான நேற்று பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். டாக்காவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்ற அவர் சிறிது நேரம் தியானம் செய் தார். முன்னதாக அவர் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகேஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் இந்தி மொழித் துறையை தொடங்கி வைத்தார். இந்திய தூதரகத்தைப் பார்வையிட்டார். பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.

ரூ.12,000 கோடி நிதியுதவி

வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ரூ.12,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் உறுதியளித்தார்.

மேலும் இருநாட்டு வர்த்தக உறவை வலுப்படுத்த வங்கதேசத் தின் இரண்டு சிறப்பு பொருளாதார சிறப்புத் திட்ட மண்டலங்களை இந்திய நிறுவனங்களுக்காக ஒதுக்க அந்த நாட்டு அரசு நேற்று அனுமதி அளித்தது. எல்.ஐ.சி. நிறுவனம் வங்கதேசத்தில் வணிகம் செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வங்கதேச தேசிய கட்சியின் தலைவர் கலிதா ஜியாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in