

வளர்ச்சி காணாத மற்றும் பின் தங்கிய மாநிலங்களுக்கு உதவிகரமாக இருந்த திட்ட கமிஷனை மோடி அரசு ‘அவசரப்பட்டு கலைத்து விட்டது’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடியுள்ளார்.
காங்கிரஸ் முதல்வர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “வளர்ச்சி காணாத பலவீனமான மாநிலங்களுக்கு திட்ட கமிஷன் உதவிகரமாக இருந்தது, அதனை அவசரப்பட்டு கலைத்தது கவலையளிக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை தடுக்கும் பங்கினை செய்த பாஜக, தற்போது ஜிஎஸ்டி-யின் மிகப்பெரிய சாம்பியனாகியுள்ளது.
இப்போது பரிந்துரைக்கப்பட்ட இந்தச் சட்டம் சிறந்தது என்று என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2014-15-இல் வளர்ச்சியடைந்ததாக குதூகலமாக பேசப்பட்டு வருகிறது, ஆனால் அரசுக்கும் உள்ளேயும் வெளியேயும் அதன் எண்ணிக்கை குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன” என்றார் மன்மோகன் சிங்.
திட்டகமிஷனுக்குப் பதிலாக நிதிஆயோக் என்ற புதிய குழுவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. நிதி ஆயோகின் பங்கு சில மாநிலங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
ராகுல் காந்தி பேசும் போது, “காங்கிரஸ் ஆளும் 9 மாநிலங்கள் நாட்டில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது என்பதை நாம் காட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சியில் முதல்வர்கள் பக்கம் அனுபவம் நிறைய உள்ளது, அவர்களே நமக்கு வழிகாட்ட வேண்டும்” என்றார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, "விவசாயிகளின் கவலை நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்" என்றார்.