முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி போராட்டம்

முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி போராட்டம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் மஜக-பாஜக தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்பை மீறி பேரணியாக சென்றதால் போலீஸார் தடியடி நடத்தினர்.

மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் இணைந்து ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், வெள்ள நிவாரணம் வழங்குவதில் புதிய அரசு தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று காலையில் ஷெர்-இ-காஷ்மீர் பூங்காவில் குவிந்தனர். பின்னர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் வந்ததும் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள், ‘வெள்ள நிவாரணம் எங்கே’, ‘மோடி-முப்தி பதவி விலகு’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முதல்வர் முப்தி முகமது சையதுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.

பேரணி ரீகல் சவுக் பகுதியில் நிறுத்தப்பட்டது. அங்கு வாகனத்தில் இருந்தபடி ஒமர் பேசினார். அப்போது, நகரின் மிக முக்கிய லால் சவுக் பகுதியை நோக்கி பேரணி தொடரும் என அவர் அறிவித்தார்.

இதையடுத்து, அந்த இடத்திலேயே பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக போலீஸார் தடுப்புகளை அமைத்தனர். அங்கிருந்து நகர அனுமதி மறுத்தனர். இதற்கிடையே தடுப்புகளை மீறி பேரணியாக சென்ற அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். ஆனாலும் அவர்கள் அதையும் மீறி வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிகார கோபுரம் அமைந்துள்ள பகுதி வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in