

ஊழலில் ஈடுபடமாட்டேன், மற்றவர்களை ஊழல் செய்யவும் அனுமதிக்க மாட்டேன் என்பது மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் முக்கிய முழக்கமாக இருந்தது.
தனிப்பட்ட முறையில் மோடி ஊழலுக்கு எதிரானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவரை தனிப்பட்ட முறையிலும் எனக்கு நன்றாக தெரியும். சட்டத்தை மீறுவதற்கும், விதிகளை தளர்த்திக் கொள்வதற்கும் வளைந்து கொடுக்கும் நபர், மோடி அல்ல.
இதற்கு முன்பு இருந்த பல பிரதமர்களுக்கும் இது பொருந்தும். மன்மோகன் சிங் இப்போது சில வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். எனினும் அவர் தனிப்பட்ட வகையில் ஊழலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்பது எனது நம்பிக்கை. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், குஜ்ரால், அதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா ஆகியோரும் தனிப்பட்ட முறையில் கை சுத்தமானவர்கள்.
எனவே மோடியின் முதல் வாக்குறுதி திட்டவட்டமான உண்மை. ஆனால் மற்றவர்களை முக்கியமாக தனது அமைச்சரவை சகாக்களையும் ஊழலில் ஈடுபட அனுமதிக்க மாட்டேன் என்ற வாக்குறுதிதான் இப்போது பிரச்சினையாகியுள்ளது. இந்த விஷயத்தில் தினம்தோறும் நம்மிடையே நடக்கும் ஊழல்களை பற்றியும் பேச வேண்டும். ஓட்டுநர் உரிமம் வாங்குவது, நிலப் பதிவு உள்ளிட்ட பல நடைமுறைகளில் அசவுகரியங்களையும், அரசுக்கு கூடுதல் வரி செலுத்துவதையும் தவிர்க்க மக்களே லஞ்சம் கொடுக்க முன்வருகிறார்கள். இது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது.
இனி மோடி விஷயத்துக்கு வருவோம். மற்றவர்களை ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற வாக்குறுதியில் முந்தைய பிரதமர்களைவிட மோடி ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளார். ஏனெனில் முன்பு மன்மோகன் சிங் அமைச்சரவையில் அவரால் தட்டிக்கேட்க முடியாத சில அமைச்சர்கள் இருந்தார்கள். ஏன் வாஜ்பாய் கூட இந்த விஷயத்தில் தடுமாற வேண்டியிருந்தது. அவர்கள் சிறுபான்மை அரசுக்கு தலைமை ஏற்றிருந்தது இதற்கு முக்கிய காரணம். கூட்டணி கட்சிகளை தக்கவைக்க பல சமரசங்களை செய்ய வேண்டியிருந்தது.
இப்போது தனது அமைச்சரவை சகா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மோடி எவ்வாறு முடிவெடுக்க இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா விவகாரத்தில் அவர் இதுவரை விளக்கம் அளிக்கவும் இல்லை. சுஷ்மா செய்தது சரிதான் என்று கூறி அவருக்கு ஆதரவு அளிக்கவும் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்ற அவரது வாக்குறுதி குறித்து கேள்வி எழுகிறது.
லலித் மோடிக்கு உதவிய விஷயத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாதது தவறான அணுகுமுறைதான்.
லலித் மோடி மூலம் தனது உறவினருக்கு வெளிநாட்டு கல்லூரியில் சீட் வாங்கியது, சுஷ்மாவின் கணவர், லலித் மோடியின் வழக்கறிஞராக இருப்பது போன்றவை கவனிக்க வேண்டியது. இந்தியாவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனுக்கு ஓடிய ஒருவர், அங்கிருந்து வேறுநாட்டுக்கு பயணிக்க ஆதரவாக வெளியுறவு அமைச்சரே செயல்படுவது எப்படி சரியாக இருக்க முடியும்.
லஞ்சம், ஊழல், முறைகேடு என்பது பணத்துடன் மட்டும்தான் தொடர்புடையது என்று நாம் பொதுவாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும் ஊழல்தான். மத்திய அமைச்சரும், முதல்வரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது இங்கு தெளிவாகிறது. அவர்களை பதவியில் தொடர விட்டால் பிரதமர் தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்பதே அர்த்தம்.