Published : 23 May 2014 01:41 PM
Last Updated : 23 May 2014 01:41 PM

மோடி பதவியேற்பில் ராஜபக்சே பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்: ராஜ்நாத்திடம் வைகோ நேரில் வலியுறுத்தல்

மோடி பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் வைகோ நேரில் வலியுறுத்தினார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பிரதமர் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதை தவிர்க்குமாறு மோடியிடம் எடுத்துரைக்குமாறு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

ஒருவேளை ராஜபக்சே பதவியேற்பு நிகழ்ச்சி வருவது உறுதியானால் அந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த வைகோ, மோடி என்ன முடிவு எடுப்பார் என எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறினார்.

முன்னதாக நேற்று (வியாழக்கிழமை), பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு காரணங்களை முன்வைத்து நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ உருக்கமாக கடிதம் எழுதியிருந்தார்.

அதில், 1998 ஆம் ஆண்டிலும், 1999 ஆம் ஆண்டிலும், வாஜ்பாய் அவர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதையும் 2004 ஆம் ஆண்டிலும், 2009 ஆம் ஆண்டிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்பு விழாவுக்கும் ராஜபக்சே அழைக்கப்படவில்லை என்ற தகவலையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லிக்குச் சென்று ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x