

மியான்மரில் தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய நடவடிக்கையால் பாகிஸ்தான் பீதியடைந்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
"தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்தியாவின் அதிரடி நடவடிக்கை சில நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் அவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்" என மியன்மர் தாக்குதல் குறித்த பாகிஸ்தான் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மியான்மர் நாட்டுக்குள்ளேயே புகுந்து அங்கு பதுங்கியிருந்த 38 தீவிரவாதிகளை ஒழித்து இந்திய வீரர்கள் 18 பேரை சுட்டுக் கொன்ற வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது இந்தியா.
கடந்த செவ்வாய்க்கிழமை 70 இந்திய வீரர்களுடன் ஹெலிகாப்டர்கள் மியான்மர் நாட்டுக்குள் அதிரடியாக புகுந்த இந்திய ராணுவத்தினர் அங்கு பதுங்கியிருந்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகளின் முகாம்களை அடித்து நொறுக்கின. இதில் 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இத் தாக்குதல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், "இத்தகைய அதிரடி நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்ததன் மூலம் நமது பிரதமர் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார். அவரது இந்த துணிவு அனைத்து நாடுகளுக்குமே ஒரு எச்சரிக்கை. உள்நாட்டில் இருந்து கொண்டே தீவிரவாதத்தை கட்டவிழ்க்கும் அமைப்புகளையும் இதேபோல் நேரம், காலம் பார்த்து தாக்குதல் நடத்துவோம்"
இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிஸார் அலி கான், "மியான்மரில் நடத்தியதுபோல் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தலாம் என இந்தியா தவறாக கணித்துவிடக் கூடாது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரி நாட்டு அச்சுறுத்தலை சமாளிக்கும் முழு தகுதி இருக்கிறது. எனவே இந்தியத் தலைவர்கள் பகல் கனவு காண்பதை தவிர்ப்பது நல்லது" எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தரப்பின் விளக்கம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறும்போது, "இந்தியாவின் அதிரடி நடவடிக்கை சில நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் அவர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்" என்றார்.