Last Updated : 23 Jun, 2015 11:04 AM

 

Published : 23 Jun 2015 11:04 AM
Last Updated : 23 Jun 2015 11:04 AM

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கர்நாடக அரசு

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூலை முதல் வாரத்தில் விசாரணை

*

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது. கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா 2,367 பக்க மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66.55 கோடி சொத்து சேர்த்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, நால்வரையும் நிரபராதிகள் எனக் கூறி விடுதலை செய்தார்.

இந்தத் தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகளும், கணிதப் பிழை உள்ளிட்ட குளறுபடிகளும் இருப்பதால் க‌ர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவும், தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

கர்நாடக சட்டத்துறை செயலர் சங்கப்பா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகிய மூவ‌ரும், 'நீதிபதி குமாரசாமி யின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு தகுதியானது' என அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதன் அடிப் படையில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற கர்நாடக அமைச்சர வையில், ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதென‌ முடிவெடுக் கப்பட்ட‌து.

இதைத்தொடர்ந்து, அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையில் உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மற்றும் சட்டத் துறை அதிகாரிகள் மேல்முறை யீட்டு மனுவை தயாரித்தனர்.

மேல்முறையீடு

கர்நாடக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் மற்றும் ஆச்சார்யாவின் உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் சிறப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். தற்போது உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதால், வழக்கமான நீதிமன்ற அலுவல் தொடங்கியதும் வரும் ஜூலை முதல் வாரத்தில் இம்மனு விசாரணைக்கு வரும் என பதிவுத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஆச்சார்யா விடம் கேட்டபோது, “உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை ஏற்கும் வரை அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து வெளிப்படையாக கூறமுடி யாது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, புதிய கோரிக்கைகளுடன் கூடிய மனுக்களையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம்''என்றார்.

மனுவில் இருப்பது என்ன?

2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் என்ன குறிப்பிடப்பட் டுள்ளது என கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:

ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கர்நாடக அரசு 9 தொகுதிகளாக 2,367 பக்க அளவில் சிறப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் ஏராளமான அடிப்படை தவறுகளும், அப்பட்டமான கணிதப் பிழைகளும், சட்ட முரண்பாடுகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வ‌ரும் விடுவிக்கப் பட்டது நீதிக்கு முரணானது. மேலும் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததற்கான காரணத்தை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் எங்கேயும் விளக்கவில்லை.

தவறான கணக்கீடு

ஜெயலலிதா தரப்பின் கட்டிட மதிப்பீடு, சுதாகரனின் திருமண செலவு மதிப்பீடு ஆகியவற்றை எவ்வித ஆதாரமும் இல்லாமல் நீதிபதி குமாரசாமி தன்னிச்சையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா வாங்கிய கடனை கணக்கிட்ட நீதிபதி குமாரசாமி ரூ.24,17,31,274 என தவறாக கூட்டியுள்ளார். அதை சரியாக கணக்கிட்டால் ரூ. 10,67,31,274 என்ற தொகையே வரும். நீதிபதி குமார சாமி தவறாக கணக்கிட்டு ஜெயலலி தாவின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துமதிப்பு 8.12% என கூறியுள்ளார். அதை சரியாக கூட்டி இருந்தால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து மதிப்பு 76.7% என வரும்.

கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி சொத்து மதிப்புடன், ஜெயலலி தாவின் வருமானத்துக்கு அதிக மான சொத்து மதிப்பை ஒப்பிட்டு, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள் ளார். அக்னிஹோத்ரியின் வருமா னத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. எனவே அக்னிஹோத்ரி வழக்கை அடிப்படையாகக் கொண்டு ஜெயலலிதாவை விடுவிக்க முடியாது.

ஒருதலைப்பட்சமானது

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக அரசை ஒரு வாதியாகக்கூட கருத வில்லை. அரசு வழக்கறிஞராக இருந்த பவானி சிங் நீக்கப்பட்ட போது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதை நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு வாதிட அனுமதி வழங்காமல் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் அரசு வழக்கறிஞர் தனது எழுத்துப்பூர்வ‌ வாதங்களை முன்வைக்க போதிய அவகாசம் தரப்படவில்லை. எனவே க‌ர்நாடக உயர் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக குறை பாடுகளுடன் வழங்கிய தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை

1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல் முறையாக தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர, ஆளுநர் சென்னாரெட்டி அனுமதி கொடுத்தார்.

1996 ஜூன் 14 : சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கை தொடுத்தார்.

1997 ஜூன் 4 : சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

2001-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பிறகு, அரசு தரப்பில் சாட்சியம் அளித்த 259 பேரில் 76 பேர் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.

2003 பிப்ரவரி 28 : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச‌நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

2003 நவம்பர் 18 : சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2004 - 2005 : பெங்களூரூவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, நீதிபதி ஏ.எஸ்.பச்சாப்புர்ரே, அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை தொடங்கியது.

2005- 2010 : ஜெயலலிதா தரப்பு பல்வேறு மனுக்களை போட்ட தால், அவ்வப்போது வழக்கு சுணங்கியது.

2011 அக்டோபர் 20,21 மற்றும் நவம்பர் 22,23 : ஜெயலலிதா முதல் முறையாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி பி.எம். மல்லிகார்ஜூனாவின் 1,384 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

2012 ஆகஸ்ட் 13 : ஆச்சார்யா அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகியதால், பவானிசிங் நியமிக்கப்பட்டார்.

2013 அக்டோபர் 29 : இறுதி வாதத்தை நெருங்கிக் கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக ஜான் மைக்கேல் டி'குன்ஹா நியமிக்கப்பட்டார்.

2014 செப்டம்பர் 27 : சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். நால்வ‌ரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

2014 செப்டம்பர் 29 : ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

2014 அக்டோபர் 7 : ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக நீதிபதி சந்திரசேகரா தள்ளுபடி செய்தது.

2014 அக்டோபர் 17 : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

2014 அக்டோபர் 18 : 21 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜெயலலிதா உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

2014 டிசம்பர் 17 : மேல்முறையீட்டு வழக்கை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற‌ தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து உத்தரவிட்டார்.

2015 ஜனவரி 5: நீதிபதி குமாரசாமி முன்னிலையில் மேல்முறையீட்டு வழக்கு தொடங்கியது.

2015 பிப்ரவரி 5 : மூன்றாம் தரப்பாக சேர்க்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடுத்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2015 பிப்ரவரி 26 : அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

2015 மார்ச் 11 : வழக்கின் விசாரணை நிறைவடைந்தது.

2015 ஏப்ரல் 27 : அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2015 ஏப்ரல் 28 : அரசு வழக்கறிஞராக மீண்டும் பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டு, 18 பக்க அளவில் எழுத்துப்பூர்வ‌ மூலமாக தாக்கல் செய்தார்.

2015 மே 11 : ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதிகள் என விடுதலை செய்து க‌ர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x