

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சி.ஆர். குமாரசாமி கடந்த 11-ம் தேதி நால்வரையும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தார். 19 ஆண்டுகளாக நடந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றதால் கடந்த 23-ம் தேதி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் கூட்டல் பிழை உட்பட பல்வேறு அடிப்படை பிழைகள் இருப்பதால் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறினார். தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும், காலம் தாழ்த்தாமல் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
பரிந்துரைகளும், ஆலோசனைகளும்
இதையடுத்து கர்நாடக அரசு, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், சட்டத் துறை செயலர் சங்கப்பா ஆகியோரிடம் விளக்கம் கேட்டது. மூவர் தரப்பிலும், ‘ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மேல்முறையீட்டுக்கு தகுதியானது' என பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேல்முறையீடு விவகாரத்தில் கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்காமல் 20 நாட்களாக அமைதி காத்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதனிடையே கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், “ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்துவது நீதியை கேலிக்கூத்தாக்குவதுபோல் அமைந்துவிடும். கர்நாடக அரசின் மீதும், நீதித் துறையின் மீதும் உச்ச நீதிமன்றம் வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கக் கூடாது. குற்றவியல் வழக்குகளில் சட்ட ரீதியான முடிவை எட்டும்வரை மேல்முறையீடு செய்வது நியதி'' என அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
பரபரப்பான அமைச்சரவை கூட்டம்
இதையடுத்து கர்நாடக தலைமைச் செயலகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு சிறப்பு அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 7-வது விவகாரமாக ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சுமார் 45 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது.
அப்போது அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், சட்டத் துறை செயலர் சங்கப்பா ஆகியோர் “மேல்முறையீட்டுக்கு செல்லலாம்” என பரிந்துரைத்த அறிக்கை யின் மீது விவாதிக்கப்பட்டது. கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவக் குமார் உட்பட 3 அமைச்சர்கள், “இவ்வழக் கில் மேல்முறையீடு தேவையில்லை. அரசுக்கு தேவையற்ற நெருக்கடியும், செலவும்தான் ஏற்படும்'' என்றனர்.
ஆனால் பெரும்பான்மையான அமைச் சர்கள், “ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். நீதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை தயங்காமல் எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினர். இதை யடுத்து, “ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்படும்'' என முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் இல்லை
இது தொடர்பாக கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், சட்டத்துறை செயலர் சங்கப்பா ஆகியோர் அளித்த பரிந்துரையின் பேரில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யுமாறு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக அரசின் இந்த முடிவில் எவ்வித அரசியல் பழிவாங்கல் எண்ணமும் இல்லை. முழுக்க முழுக்க சட்ட ரீதியான அம்சங்களின் அடிப்படையிலேயே மேல்முறை யீடு செய்வது உறுதி செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வாதிடுவார். அவருக்கு உதவியாளராக சந்தேஷ் சவுட்டா செயல்படுவார்.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு வழங்கிய மேல்முறையீட்டு தகுதியை அடிப்படையாகக் கொண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும். அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமாருடன் ஆலோசித்த பிறகு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் தேதி அறிவிக்கப்படும்''என்றார்.
இந்த முடிவை அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவும், அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமாரும் வரவேற்றுள்ளனர்.