Last Updated : 25 Jun, 2015 08:17 AM

 

Published : 25 Jun 2015 08:17 AM
Last Updated : 25 Jun 2015 08:17 AM

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் கன மழை: தமிழகத்துக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறப்பு- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள‌ காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்துள்ள‌தால் கிருஷ்ணரா ஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி 124.8 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 89.50 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 29,363 கன அடியாகவும் இருந்தது. இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரமுள்ள ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,820 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 2,654 கன அடியாகவும் இருந்தது.

கடல் மட்டத்திலிருந்து 2,922 உய‌ரத்தில் உள்ள‌ ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,873 அடியாக அதிகரித்துள்ளது. ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அடுத்த ஒரு வாரத்துக்குள் இரு அணைகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாக நிரம்பும் கபினி

கடந்த 5-ம் தேதியிலிருந்து கேரள மாநிலம் வயநாடு பகுதி யிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மைசூருவை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் ஹெச்.டி. கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,274 அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 9,492 கன அடியாக உள்ளது.

தமிழகத்துக்கு நீர் திறப்பு

காவிரி நீர்ப்பாசனத் துறை முதன்மை பொறியாளர் கே.என். பிரசாத் கூறும்போது, “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால், குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த இரு நாட்களாக தலா 8 அடி வீதம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஒரு வாரத்தில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

இதேபோல ஏறக்குறைய 90 சதவீதம் நிரம்பியுள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருப்ப‌தால், அடுத்த 2 நாட்க‌ளில் கபினி முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 9,492 கன அடி வீதமும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 3,000 கன அடி வீதமும் பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. இதுமட்டு மின்றி ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளிலிருந்தும் தலா 1,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட் டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரிக்கும்” என்றார்

கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு

இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதைக் கண்டித்து மைசூர், மாண்டியா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டத்தில் குதித்தனர். மாண்டியா மாவட்டத்தில் ரங் கப்பட்டினம் அருகே கர்நாடக விவ‌சாயிகள் சங்க பிரதிநிதிகள் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத் துக்கு வந்த போலீஸார், போராட் டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங் களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள நீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x