விருப்பம் இல்லாத மனைவியுடன் கட்டாய உறவு: பாலியல் வன்முறைக்கு முடிவு வருமா?

விருப்பம் இல்லாத மனைவியுடன் கட்டாய உறவு: பாலியல் வன்முறைக்கு முடிவு வருமா?
Updated on
2 min read

கணவன் - மனைவி உறவு என்பது காலம் காலமாக விவாத பொருளா கவே இருக்கிறது. குறிப்பாக பாலியல் தொடர்பான விஷயங்களில் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பதில்லை என்ற புகார் இன்னும் தொடர்கிறது. விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வது இந்தியா வில் சாதாரணமாக உள்ளது. இது பாலியல் வன்முறைதான் என்று ஏற்றுக் கொள்ளும் காலம் வரவில்லை. இதை சட்டமாக்கவும் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

மனைவியை துன்புறுத்தி உறவு கொள்வது சரியா தவறா என்ற விவா தம் முதன்முதலில் 125 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, 11 வயது வங்கச் சிறுமியை 35 வயது ஆணுக்குத் திருமணம் செய்து வைத் துள்ளனர். அதன்பின், சிறுமியிடம் கொடூரமாக கணவன் வல்லுறவு கொண்டதில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

இதையடுத்து, பெண்கள் சம்மதத் துடன் உறவு வைத்து கொள்வதற்கான வயதை 10-ல் இருந்து 12 என மாற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. ஆனால், ‘திருமணம் என்பது புனிதமான விஷயம். இதில் அந்நிய நாட்டினர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை’ என்று இந்தியாவின் முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் விவாதம், எதிர்ப்புக்கு பின், கடந்த 1891-ம் ஆண்டுதான் திருமணமான அல்லது திருமணமாகாத பெண்ணிடம் அவருடைய ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொள்வதற்கான வயது உயர்த்தப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

சட்டப்பிரிவு 375, ‘பலாத்காரம்’, ‘சம்மதம்’ என்ற வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கிறது. அதில், ‘‘15 வய துக்கு குறைவில்லாத தன் மனைவி யிடம் கணவன் பாலியல் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது’’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் திரு மணம் என்ற பெயரில் மனைவியின் விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமலோ உறவு வைத்துக் கொள்ள லாம் என்கிறது. சட்டத்தில் இந்த பாது காப்பு இருப்பதனாலேயே, திருமணம் என்ற பெயரில் மனைவியின் விருப்பம் இல்லாத போதும்கூட கணவன் உறவு கொள்வது தொடர்கதையாக உள்ளது. இதுவும் பாலியல் வன்முறைதான்.

இதுகுறித்து தேசிய குடும்பநலத் துறை (என்எப்ஹெச் எஸ்), 15 வயது முதல் 49 வயது வரை உள்ள 80 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட் டுள்ளது. கணவனால் பாலியல் வன் முறைக்கு ஆளாவது, மற்ற ஆண் களால் பாலியல் வன்முறைக்கு உள்ளா வது தொடர்பான கேள்விகள் அந்தப் பெண்களிடம் கேட்கப்பட்டன. இந்த புள்ளி விவரத்தில் 12 பெண்களில் ஒருவர், அதாவது 8.5 சதவீதம் பெண்கள் பாலியல் வன்முறையை சந்தித்ததாக கூறியுள்ளனர். அதேபோல், முன்னாள் கணவன் அல்லது கணவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக 93 சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர். முன்பின் தெரியாத ஆணால் பாலியல் வன்முறையை சந்தித்ததாக ஒரு சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்களை , தேசிய குற்றங்கள் பதிவு கழகத்தின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப் பட்டது. இதில் கணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக ஒரு சதவீத பெண்கள் மட்டுமே போலீஸில் புகார் அளித்துள்ளது தெரிய வந்துள் ளது. மற்றவர்கள் வெளியில் சொல்ல வில்லை. இந்தச் சூழ்நிலையில், திருமணம் என்ற பெயரில் நடக்கும் பலாத்காரத்தை தடுக்க, சட்டப்பூர்வ மான ஆதரவு இருந்தால், கணவனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி கிடைக்கும், நம்பிக்கை பிறக்கும். இதற்கு நீதிபதி வர்மா ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி பழைய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்களவையில் பெரும் பான்மை பலத்துடன் உள்ள எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து, சட்டத் திருத்தம் கொண்டுவர தனிநபர் மசோதாவை நிறைவேற்ற முன்வரலாம். திருமணம் என்ற பெயரில் கணவனால் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு வது கிரிமினல் குற்றம் என்று அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வலியுறுத்தலாம்.

குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, தங்குவதற்கு வீடு, மருத்துவ வசதி, பொருளாதார ரீதியாக நிவாரணம் போன்றவை கணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்ணுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டத் திருத்தங்களால் மட்டுமே கணவனால் பாலியல் வன்முறையை தடுத்து விட முடியும் என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல்.

மனைவியை அடிப்பதை நியாயப்படுத்தலாமா என்று பெண்களிடம் கேட்டதற்கு 54 சதவீதம் பேர் அதற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது, சட்டத் திருத்தங்களால் மட்டுமே சமூகத்தில் உள்ள மக்களின் மனநிலையை மாற்றி விட முடியாது என்பது தெளிவாகிறது.

அம்பேத்கர் ஒருமுறை கூறும்போது, ‘‘சட்டத்தால் உரிமைகள் பாதுகாக்கப் படவில்லை. சமுதாயம் மற்றும் மனசாட்சிப்படிதான் உரிமைகள் பாதுகாக்கப்படும். ஒரு விஷயத்தை ஒரு சமுதாயம் எதிர்த்தால், அதன்பிறகு சட்டம் இல்லை, நாடாளுமன்றம் இல்லை, நீதித்துறை இல்லை. இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் இதுதான் என்று உறுதி அளிக்க முடியுமா?’’ என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in