

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு அடுத்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தலைமையில் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், நால்வரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகள் இருப்பதால், கர்நாடக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை வடிவமைப்பது தொடர்பாக கர்நாடக சட்டத்துறை செயலர் சங்கப்பா, கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உள்ளிட்டோரிடம் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா ஆலோசனை நடத்தினார். அப்போது மேல்முறையீட்டில் வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா உள்ளிட்டோருடன் இணைந்து ஜெயலலிதா தரப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சான்று ஆவணங்கள் ஆகியவற்றை பெற்றுள்ளனர்.
மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பின் உள்ள தவறு ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக வலுவான மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருகின்றனர். இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் ஜூலை முதல் வாரத்துக்கு முன்பாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் அடுத்த வாரத்துடன் முடிந்து நீதிமன்ற அலுவல்கள் தொடங்க இருக்கின்றன. எனவே அதற்கு முன்னதாக கர்நாடக அரசு சார்பாக ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து அடுத்த வாரத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டால் ஜூலை முதல் வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.