

ஊழல் குற்றம்சாட்டப்பட்ட லலித் மோடிக்கு, பிரதமர் மோடியின் ஒப்புதலுடன்தான் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராவும் உதவினார்களா? என்பது குறித்து பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
லண்டனில் தஞ்சமடைந்துள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, விசா கிடைக்க மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவி புரிந்ததாக செய்திகள் வெளியாயின. அமலாக்கத் துறையால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லலித் மோடிக்கு, இருவரும் உதவியது பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் நேற்று கூறியதாவது:
பிரதமர் மோடியின் ஒப்புதலுடன்தான் லலித் மோடிக்கு சுஷ்மாவும் வசுந்தராவும் உதவினார்களா? இதற்கு இதுவரை பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை. தியானத்தில் இருந்து வெளியில் வந்து இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் மோடியின் தலைமை மீது நம்பிக்கை இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூட கூறியுள்ளார். இதற்கு பிரதமர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். சுஷ்மாவும் வசுந்தராவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
லலித் மோடிக்கு உதவிய விவகாரம் பிரதமர் மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அல்லது இந்த விவகாரத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பிரதமர் பதில் அளிக்க வேண்டும்.
சோட்டா (லலித்) மோடி ராஜஸ்தான் அரசை வழி நடத்துகிறார். படா (நரேந்திர) மோடி மத்திய அரசை வழி நடத்துகிறார். உண்மையில் நடப்பது என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது. ராஜஸ்தானில் கறைபடிந்த முதல்வர் வசுந்தரா ராஜினாமா செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டம் நடத்தும்.
தனது தலைமையின் கீழ் உள்ள அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு செல்கிறார் கள், என்ன சாப்பிடுகிறார்கள், என்ன குடிக்கிறார்கள் என்ற விவரங்களை எல்லாம் பிரதமர் மோடி தெரிந்து வைத்திருக்கிறார்.
ஆனால், லலித் மோடிக்கு விசா கிடைக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் சுஷ்மா பேசிய விவரம் பிரதமருக்கு தெரிய வில்லையா? அப்படியானால், அவருக்கு தெரிந்துதான் சுஷ்மா பேசினாரா? இந்த விஷயத்தில் பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு டாம் வடக்கன் கூறினார்.