பிரதமர் மோடியை விமர்சித்து பேட்டி அளித்ததாக புகார்: பாஜக எம்எல்ஏவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பிரதமர் மோடியை விமர்சித்து பேட்டி அளித்ததாக புகார்: பாஜக எம்எல்ஏவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தலைவர் அமித் ஷாவையும் விமர்சித்து அக்கட்சி எம்எல்ஏ ராஜ் புரோஹித் பேட்டி அளித்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு மகாராஷ்டிர பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புரோஹித்தின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாகும். இது பற்றி மாநில கட்சித்தலைவர் ராவ் சாஹிப் தன்வேயிடம் தனது பதிலை 3 நாட்களுக்குள் புரோஹித் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் மும்பை கொலாபா தொகுதி எம்எல்ஏவுமான புரோஹித் 3 நாளில் தமது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கூற வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாக பாஜக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சில தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் மோடி, அமித் ஷாவை புரோஹித் விமர்சித்துப் பேசும் வீடியோ வெளியானது. அது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிரத்தில் சில அமைச்சர்கள் மீது போலி கல்விச்சான்று தொடர்பாகவும், ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு தொடர்பாகவும் பிரச்சினை உள்ளது. இது தவிர, லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோர் உதவிய விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி அளித்து வரும் நிலையில் புரோஹித் தொடர்பான வீடியோ சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

பாஜகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. மோடியும் ஷாவும் தான் அதிகாரத்தை வைத்துள்ளனர் என பேட்டி கேட்பவர் கேட்கும் கேள்விக்கு புரோஹித், “ஆமாம்” என்று கூறுவது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் கொள்கைகள் பற்றி புரோஹித் குறிப்பிடும்போது, ‘நரேந்திர மோடி நல்ல பணியாற்றுகிறார். ஆனால் சில தவறுகளை இனி செய்யக்கூடாது’’ என்று அவர் பேசுவதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

மோடி எடுக்கும் சில முடிவுகள் பாஜகவுக்கு தீவிர ஆதரவு தரும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கட்சியை விட்டு விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்துகிறது. கூட்டுத் தலைமை என்று பேசுகிறார்கள். ஆனால் இது முழுமையாக கிடையாது. இது கட்சிக்கு ஆபத்தானதாகும்.

கட்டுமான தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடமிருந்தும், மேலிடத்திலிருந்தும் வரும் நெருக்குதல்களை சமாளிக்க வழி தெரியாமல் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திகைத்து நிற்கிறார். ராஜ் தாக்கரே போலி தலைவர் என்றும் புரோஹித் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக்நாத் கட்சேவுக்கு (கலால் அமைச்சர்) பிறகு கட்சியின் மூத்த தலைவர் என்ற வகையில் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என்றும் புரோஹித் சொல்வது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோ ஜூன் 25-ம் தேதி முதல்முறையாக ஒளிபரப்பானது. மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 1995 முதல் 1999-ம் ஆண்டு வரை புரோஹித் மாநில அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் வீடியோவில் உள்ள குரல் தன்னுடையதல்ல என்று புரோஹித் மறுத்துள்ளார். இந்த வீடியோவை தடயவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என வலியறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவுரங்கா பாத்தில் நிருபர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது: பாஜக எம்எல்ஏக்கள் மத்தியில் நிலவும் பொதுவான மனநிலையை புரோஹித் விவகாரம் பிரதிபலிக்கிறது. புரோஹித்தின் மனநிலைதான் பாஜகவில் பெரும்பாலானவர்களிடமும் உள்ளது என்றார்.-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in