

ரிலையன்ஸ் குழும நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப்புத்தகத்தில் சேர்க்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
‘மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சுடஸ்மா அண்மையில் இந்த யோசனையை முன்வைத்தார். அதை ஏற்று அம்பானி பற்றிய வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்’ என்று பள்ளி பாடத்திட்ட வாரிய தலைவர் நிதின் பெத்தானி தெரிவித்தார்.
அம்பானியை போன்று தேனா வங்கியை நிறுவிய தேவ்கரண் நாஞ்சி உள்ளிட்ட தொழிலதிபர்களும் சமூகத்துக்கு நற்பங்கு ஆற்றியுள்ளனர். அவர்களின் பட்டியலை தயாரித்து வழங்கும்படி பாடப்புத்தகத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அத்தகைய மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு 9, 10, 11, 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை பொது அறிவு புத்தகங்களில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெத்தானி மேலும் கூறினார்.
பாடப்புத்தகங்களில் யோகா பயிற்சியை சேர்க்கப் போவதாக குஜராத் அரசு ஏற்கெனவே அறிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.