

சர்வதேச யோகா தினத்தையொட்டி, டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடந்த யோகா நிகழ்ச்சியில் செல்ஃபீ போட்டோக்கள் எடுக்க முற்பட்டவர்களிடம் பக்குவமாக மறுத்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ராஜபாதையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் முன்வரிசையில் வந்து அமர்ந்தார் பிரதமர் மோடி.
அப்போது, அவர் அருகே இருந்த தன்னார்வல இளம்பெண் ஒருவர், பிரதமர் மோடியுடன் செல்ஃபீ புகைப்படம் எடுக்க முற்பட்டார். பிரதமர் மோடி முன்பு தன் கையில் வைத்திருந்த ஸ்மார்ட் ஃபோனை நீட்டினார்.
ஆனால், உடனடியாக செல்ஃபீக்கு மறுப்பு தெரிவித்த மோடி, கைகளை நீட்டி 'வேண்டாமே' என்று பக்குவமாகச் சொல்லி தவிர்த்துவிட்டார்.
அதன் பின்னர், அந்தப் பெண் தன் சக தன்னார்வலர்களுடன் பிரதமர் மோடிக்கு பின்னால் அமர்ந்து யோகா செய்யத் தொடங்கினர். அப்போது, அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு நபர் ஒருவர் பிரதமருடன் செல்ஃபீ எடுக்க முற்பட்டு, அவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்.
உலகத் தலைவர்களுடன் மட்டுமின்றி, சாமானியர்களுடனும் சென்ற இடமெல்லாம் செல்ஃபீ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிரும் பழக்கம் கொண்ட பிரதமர் மோடி, யோகா தினத்தில் செல்ஃபீயை தவிர்த்தது கவனிக்கத்தக்கது.