Published : 01 Jun 2015 08:33 AM
Last Updated : 01 Jun 2015 08:33 AM

நர்ஸ் அருணாவை பலாத்காரம் செய்தவரை தேடி கண்டுபிடித்தது எப்படி? - மும்பை நிருபர் தகவல்

நர்ஸ் அருணாவை பலாத்காரம் செய்தவரை கண்டுபிடித்தது எப்படி என்பதை மும்பை நிருபர் தியானேஷ் சவாண் ஊடக நண்பர்களுக்கு தெரிய படுத்தியுள்ளார்.

கடந்த 1973-ம் ஆண்டில் மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அருணா ஷான்பாக் என்பவர் நர்ஸாக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு 26 வயது. அதே ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வார்டுபாய் சோஹன்லால் வால்மீகியால் அருணா பலாத் காரம் செய்யப்பட்டார்.

இதில் கோமாவுக்கு தள்ளப்பட்ட அருணா 42 ஆண்டுகளாக அதே நிலையில் இருந்தார். கடந்த 18-ம் தேதி தனது 66-வது வயதில் அவர் உயிரிழந்தார். அவரை பலாத்காரம் செய்த வால்மீகிக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1980-ல் அவர் சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார். அதன்பிறகு அவரை குறித்து எவ்வித தகவலும் இல்லை.

அருணா உயிரிழந்த பிறகு அவரின் துயரத்துக்கு காரணமான வால்மீகி எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் யாரிடமும் விடையில்லை.

மும்பையைச் சேர்ந்த நிருபர் தியானேஷ் சவாண் இதற்கு விடை தேட முயன்றார். அவரின் விடாமுயற்சியால் கடந்த மே 30-ம் தேதி வால்மீகியின் புகைப்படம் நாளிதழில் வெளியானது. அவரை தேடி கண்டுபிடித்தது குறித்து தியானேஷ் சவாண் ஊடக நண்பர்களிடம் கூறியிருப்பதாவது:

புணேவின் எரவாடா சிறையில் இருந்து வால்மீகி விடுதலையானார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அவர் டெல்லியில் இருக்கிறார் என்று பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

முதல்கட்டமாக அவரது சொந்த கிராமமான உத்தரப் பிரதேசத்தின் தாதுபுர் கிராமத்துக்குச் சென்றேன். அவர் டெல்லி அருகே காஜியாபாதில் உள்ள பார்பா கிராமத்தில் வசிப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து பார்பா கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை தேடி கண்டுபிடித்தேன்.

அவரது மூத்த மகன் ரவீந்திரா வீட்டில் இருந்தார். அவர் என்னை விரட்ட முயன்றார். 3 மணி நேரம் கழித்து இரவில் வால்மீகி வீட்டுக்கு வந்தார். முதலில் அவர் பேச மறுத்தார். எனது தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாத அவர், சம்பவத்தன்று நடந்தது சரியாக நினைவில்லை என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.

அவர் என்னிடம் பேச மறுத்து விட்டாலும் அவரைக் கண்டுபிடித்து உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்ற எனது முயற்சி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக் கிறது. இவ்வாறு நிருபர் தியானேஷ் சவாண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x