

தனது ஊழல் ஒழிப்புப் பிரிவில் பிஹாரைச் சேர்ந்த 5 அதிகாரிகளை சேர்க்க டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் மீண்டும் தெரிவித்ததையடுத்து, மத்திய அரசை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது.
அதாவது ஊழல் செய்பவர்களே ஊழல் ஒழிப்பு குறித்து பயப்படவேண்டும், மத்திய அரசு எந்திரம் ஏன் பயப்படுகிறது என்று புரியவில்லை என்று அக்கட்சி விமர்சித்துள்ளது.
“ஊழல் ஒழிப்பு பிரிவு துணை நிலை ஆளுநரின் அதிகார எல்லைக்குள் இல்லை, ஆனால் இன்று காலை நஜீப் ஜங் ஆளுநர் அதிகார எல்லைக்குள் ஊழல் ஒழிப்பு பிரிவு இருப்பதாக அறிக்கை அளித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் நாளை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏதாவது விசாரணை நடத்த வேண்டுமென்றால் கூட டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி பெற வேண்டும் என்று கூறுவார்கள் போலத் தெரிகிறது” என்று ஆம் ஆத்மி தலைவர் அஷுதோஷ் கிண்டலடித்துள்ளார்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அலுவலகத்தில் அனுமதி கேட்டு ஆம் ஆத்மி கட்சி இந்த 5 உயரதிகாரிகளையும் ஊழல் ஒழிப்புப் பிரிவில் சேர்த்துள்ளனர்.
"ஆனால் நஜீப் ஜங், இது டெல்லி அரசின் அதிகாரத்துக்குட்பட்டதல்ல என்று கூறியுள்ளதையடுத்து அவர், தனது பதவியைத் தக்க வைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளுக்கு ‘அடிபணிகிறார்’. ஆகவே, துணைநிலை ஆளுநர் தனது பதவியை ஒரு ஜோக்காக மாற்ற வேண்டாம் என்று நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் அனைத்தையும் மத்திய அரசு முடக்கப்பார்க்கிறது" அஷுடோஷ் கடுமையாக பேசியுள்ளார்.