பாஜக சர்ச்சை அமைச்சர்களை நீக்க கோரி ஆஆக போராட்டம்

பாஜக சர்ச்சை அமைச்சர்களை நீக்க கோரி ஆஆக போராட்டம்
Updated on
1 min read

சர்ச்சைகளில் சிக்கியுள்ள பாஜக அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜே மற்றும் பங்கஜா முண்டே ஆகிய 4 பேரையும் பதவி நீக்கம் செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தெருவை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி நடத்தினர் அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினரும் இடம் பெற்றனர்.

ஐபிஎல் ஊழலில் சிக்கிய லலித் மோடி விசா பெறுவதற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவியதாக எழுந்த சர்ச்சையில் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அதே கோரிக்கையை ஆம் ஆத்மி கட்சியினரும் இன்று வலியுறுத்தினர்.

இதேபோல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய ஆம் ஆத்மி கட்சியினர் இவ்விவகாரத்தில் ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என்றனர்.

போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய ஆம் ஆத்மி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் பதவியிழந்து சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப் படும் நொறுக்குத் தீனி, புத்தகம் உட்பட பல்வேறு பொருட்களை ரூ. 206 கோடிக்கு கொள்முதல் செய்ததில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே விதிகளை மீறியிருப்பதாக புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து அவரும் பதவி விலக வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.

போராட்டம் குறித்து ஆம் ஆத்மி தொண்டர்கள் சிலர் கூறும்போது, "பெண் அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கியுள்ளது குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்" என்றனர். அதேபோல், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in