கேஜ்ரிவால், 21 எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் தீவிரம்

கேஜ்ரிவால், 21 எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் தீவிரம்
Updated on
2 min read

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில், அம்மாநில போலீஸார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இதனால், கேஜ்ரிவால் - மத்திய அரசு இடையிலான மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜ்ரிவால் அரசியலில் நுழைந்தது முதல் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். இவருடன் இவரது கட்சியினர் மீதும் வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன. இதில், கேஜ்ரிவால் மீது மட்டும் டெல்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் 47 புகார்கள் பதிவாகி அவற்றின் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவை, அரசு ஊழியர்களை பணி யாற்ற விடாமல் தடுத்தது, கலவரத்தை தூண்ட முயற்சித்தது, அவதூறு பரப்பியது ஆகிய வழக்குகள் ஆகும். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதான 33 புகார்களில் 13 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதேபோன்று போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய், சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், துணை சபாநாயகர் வந்தனா குமாரி மற்றும் 17 எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன. இதில் டெல்லி முன்னாள் அமைச்சர்கள் சவ்ரவ் பரத்வாஜ், ராக்கி பிர்லான், சோம்நாத் பாரதி ஆகியோரும் அடங்குவர். இவ்வழக்குகளை தற்போது கையில் எடுத்துள்ள டெல்லி போலீஸார் இவற்றின் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறும்போது “மிகவும் தீவிரமான வழக்குகளை சந்தித்து வருவோர் மீது முதலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவர்களில் இருவர் மீது பாலியல் மற்றும் மோசடி வழக்குகளும் பதிவாகி உள்ளன.

கேஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டு கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 1 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வழக்குகளை எதிர்கொள்ள கேஜ்ரிவால் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் அதன் விவரங்களை கேட்டு காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸிக்கு கடிதம் எழுதியுள்ளார்” என்றனர்.

டெல்லி அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மூலமாக முதல்வர் கேஜ்ரிவால் மத்திய அரசு இடையே ஏற்கெனவே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவ்வழக்குகள் உயிர் பெறுவதன் மூலம் இந்த மோதல் மேலும் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் அசுதோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவில், “சுஷ்மா லலித் மோடி விவகாரத்தை திசை திருப்புவதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் 21 பேரை கைது செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. இவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in