Last Updated : 23 Jun, 2015 10:52 AM

 

Published : 23 Jun 2015 10:52 AM
Last Updated : 23 Jun 2015 10:52 AM

அன்னை தெரசா அறக்கட்டளை முன்னாள் தலைவர் சகோதரி நிர்மலா ஜோஷி காலமானார்

அன்னை தெரசாவால் நிறுவப் பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ யின் முன்னாள் தலைவரான சகோதரி நிர்மலா ஜோஷி (81) உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் நேற்று காலை காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அஞ்சலி செலுத் தினார்.

இதுகுறித்து அறக்கட்டளையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரி நிர்மலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பிறகு படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. நேற்று காலையில் அவரது உயிர் பிரிந்தது.

இன்று இறுதிச் சடங்கு

நிர்மலாவின் உடல் சீல்டாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேவால யத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் இன்று அன்னை இல்லத்தில் வைக்கப்படும். அஞ்சலிக்குப் பிறகு மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அன்னை தெரசா 1997 செப்டம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன்பு 1997 மார்ச் 13-ம் தேதி அறக்கட்டளையின் தலைவராக (சுப்பீரியர் ஜெனரலாக) நிர்மலா ஜோஷி பொறுப்பேற்றார்.

உடல்நலக் குறைவு காரணமாக நிர்மலாபதவி விலகியதையடுத்து, கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் புதிய தலைவராக மேரி பிரேமா பொறுப் பேற்றார்.

வாழ்க்கை வரலாறு..

கடந்த 1934-ம் ஆண்டு அன்றைய பிஹார், ஒடிஸா பிராந்தியத்தின் ராஞ்சி நகரில் சகோதரி நிர்மலா ஜோஷி பிறந்தார். ராஞ்சி தற்போது ஜார்க்கண்ட் மாநில தலைநகராக உள்ளது.

நிர்மலாவின் பெற்றோர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். பிறப்பில் இந்துவான நிர்மலா, பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் கல்வி பயின்றார். அப்போது அன்னை தெரசாவின் தொண்டு பணிகளால் ஈர்க்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய அவர் தனது 17-வது வயதில் அன்னை தெரசாவின் 'மிஷனரிஸ் ஆப் சேரிட்டி' அமைப்பில் இணைந்தார்.

அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்ற அவர், அன்னை தெரசாவின் அறிவுரைப்படி சட்ட கல்வியும் பயின்றார். அன்னை தெரசாவின் வெளிநாட்டுப் பயணங்களின்போது நிர்மலாவும் உடன் செல்வது வழக்கம். பனாமா, நியூயார்க், காத்மாண்டு ஆகிய நகரங்களில் மிஷனரிஸ் ஆப் சேரிட்டி மையங்களை நிறுவியதில் நிர்மலாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

கடந்த 1997 செப்டம்பர் 5-ம் தேதி அன்னை தெரசா காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து 'மிஷனரிஸ் ஆப் சேரிட்டி' அமைப்பின் தலைவராக நிர்மலா பொறுப்பேற்றார். அப்போது அவர் கூறியபோது, அன்னை தெரசாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, எனினும் அவர் காட்டிய வழியில் நடப்போம் என்று தெரிவித்தார். சகோதரி நிர்மலாவின் தொண்டு சேவையைப் பாராட்டி கடந்த 2009-ம் ஆண்டில் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

133 நாடுகளில் செயல்படும் அறக்கட்டளை

ரோமன் கத்தோலிக்க அமைப்பான 'மிஷனரிஸ் ஆப் சேரிட்டி' அன்னை தெரசாவால் கடந்த 1950-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 133 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளையில் 4,501 பேர் சேவை செய்து வருகின்றனர்.

இந்த அறக்கட்டளையில் ஆண், பெண் ஆகிய இருபாலரும் உறுப்பினராக சேரலாம். இவர்கள், 4 முக்கிய கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது தூய்மை, எளிமை, பணிவு ஆகியவற்றைக் கடைபிடிப்பதுடன் ஏழை மக்களுக்கு இலவச சேவை செய்ய வேண்டும்.

வானொலி, தொலைக்காட்சி மற்றும் இதர ஆடம்பர சாதனங்களைப் பயன்படுத்தாமல் எளிமையாக வாழ்வை கடைபிடிக்க வேண்டும். புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும். வருடாந்திர விடுமுறை கிடையாது.

அகதிகள், முன்னாள் விலை மாதர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அனாதை மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், தொழு நோயாளிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் உள்ளிட்டோருக்கு இந்த அறக்கட்டளை ஆதரவு அளித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x