

"ஒரு பெண் தலைவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் காங்கிரஸ் மகளிர் விரோத போக்கை கடைபிடிக்கிறது என நினைக்கிறேன்" என பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஐபிஎல் ஊழலில் சிக்கிய லலித் மோடி விசா பெறுவதற்கு உதவிய விவகாரத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாஜக தலைவர்கள் பலர் வரிசையாக ஆதரவுக் கரம் நீட்டிவந்த நிலையில், தற்போது காங்கிரஸ் மீது புதுவிதமான தாக்குதலை முன்வைத்துள்ளது பாஜக.
ஆம், பாஜக செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் இன்று காலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "ஒரு பெண் தலைவரை கடும் விமர்சனத்துக்குள்ளாக்குவதன் மூலம் காங்கிரஸ் மகளிர் விரோத போக்கை கடைபிடிக்கிறது என நினைக்கிறேன்" எனக் கூறினார்.
இருப்பினும் அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் பெண் தான். அவரை பாஜக விமர்சிக்கத் தவறியதில்லையே என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், லலித் மோடி நேற்று இந்தியா டுடே சேனலுக்கு அளித்த பேட்டியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீதும் ப.சிதம்பரத்தின் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், தன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ட்வீட் செய்துள்ள சிதம்பரம், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை வெளியிட்டால் லலித் மோடி குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும்" எனக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் ராஜீவ் சுக்லா, சரத் பவார், பிரபுல் படேல் ஆகியோர் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு உதவியதாக லலித் மோடி தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதையும் காங்கிரஸ் தரப்பு மறுத்துள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓசா, "கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின்னர் லலித் மோடியை ஒருமுறை கூட ராஜீவ் சுக்லா சந்தித்ததில்லை" எனத் தெரிவித்துள்ளார்.