

மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் உணவுப் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை இது தொடர்பாக அவர் கூறியது:
உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திடம் மேகி நூடுல்ஸ் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினோம். அதன்படியே மேகியின் 9 வகை நூடுல்ஸ்களின் விற்பனையை நிறுத்தவும், ஏற்கெனவே விநியோகிக்கப்படவற்றை திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளோம்.
மேகி நிறுவனம் உணவு பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளது. மேகி நூடுல்ஸ் தொடர்பாக ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனியாக நடத்திய ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மேகி நுடுல்ஸ் தயாரிப்பில் உணவுப் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது முதல் கட்ட தர ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவேதான் அவற்றை தடை செய்ய முடிவு செய்யப்பட்டதுடன், ஏற்கெனவே சந்தையில் உள்ள நூடுல்ஸ்களை திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் மேகியின் சில தயாரிப்புகளில் அதன் உட்பொருட்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்படவில்லை. மேகி ஓட்ஸ் நூடுல்ஸில் உள்ள டேஸ்ட் மேக்கர் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான உணவை அளிக்கும் விஷயத்தில் மத்திய அரசு எவ்வித சமரசம் செய்துகொள்ளாது. உணவுப் பொருட்களின் பாதுகாப்பையும், தரத்தையும் உறுதி செய்ய அனைத்து நிலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நட்டா கூறினார்.