

சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் விநாயகர் சிலைகளின் கண்கள் மிகவும் சுருங்கி உள்ளன. அதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளையே நாம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் மனோகர் பாரிக்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் பல விழாக்களில் பங்கேற் கிறேன். அப்போதெல்லாம் எனக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கப்படுகின்றன. அந்த சிலைகளின் கண்கள் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன.
ஒரு நாள் எனக்கு பரிசளிக்கப் பட்ட விநாயகர் சிலையை கவனித் தேன். அதனுடைய கண்கள் மிகவும் சுருங்கி இருந்தன. உடனே அந்தச் சிலையை நான் திருப்பிப் பார்த்தேன். அதில் 'சீனாவில் தயாரானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சரஸ்வதி மற்றும் விநாயகர் போன்ற கடவுளின் உருவங்களை எல்லாம், ஓவியர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியங்களை அடைப்படையாகக் கொண்டு இந்தியர்கள் செய்து வருகிறார்கள்.
அவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. இது தீவிரமான பிரச்சினை. தீபாவளிக்கு நாம் செய்யும் பரிசுப் பொருட்கள் முதல் கடவுள் உருவங்கள் வரை அனைத்தை யும் 'இந்தியாவில் தயாரிக்க' நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.