ஐபிஎல் முறைகேட்டில் சிக்கிய லலித் மோடிக்கு உதவிய விவகாரம்: சுஷ்மா வீடு முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் - பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவி செய்ததைக் கண்டித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வீடு முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுஷ்மா பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்தும் ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது கடந்த 2010-ல் ஊழல் புகார் எழுந்தது. இதையடுத்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்ற லலித் மோடி, வழக்கு விசாரணைக்காக இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். இதையடுத்து லலித் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத் துறை அறிவித்தது. அவரது பாஸ்போர்ட்டை மும்பையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மனைவியை பார்ப்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்வதற்கான பயண ஆவணங்கள் கிடைக்க மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், லலித் மோடியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியைச் செய்தேன் என்று சுஷ்மா தெரிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்துவரும் எதிர்க்கட்சிகள், சுஷ்மா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலையில் டெல்லி சப்தர்கஞ்ச் பகுதியில் உள்ள சுஷ்மா வீட்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் பதவியிலிருந்து சுஷ்மா விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தின்போது, சுஷ்மாவின் உருவ பொம்மைகளையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தடுப்புகளை மீற முயற்சித்தனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பி.எல்.பூனியா செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரூ.700 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு சுஷ்மா உதவியுள்ளார். ஏதோ ஒன்றை பெற்றதற்கு பிரதிபலனாக அவர் இந்த உதவியை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. லலித் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
பிரதமர் மவுனம் கலைய வேண்டும்
இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு உதவியது மிக முக்கியமான பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஊழல் இல்லாமல் திறமையான நிர்வாகம் நடைபெறுவதாக பாஜகவும் பிரதமர் மோடியும் உரத்த குரலில் பேசி வருகின்றனர். இவை வெறும் பிரச்சாரம் மட்டுமே.
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் முக்கிய பிரச்சினையில் பிரதமர் மவுனமாக இருக்கிறார். குறிப்பாக, லலித் மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரத்தில் பிரதமர் தனது மவுனத்தை கலைத்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
