நகர்ப்புற ஏழைகளுக்காக 2022-க்குள் அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: வீட்டுக் கடனுக்கான வட்டி மானியம் உயர்வு

நகர்ப்புற ஏழைகளுக்காக 2022-க்குள் அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: வீட்டுக் கடனுக்கான வட்டி மானியம் உயர்வு
Updated on
1 min read

நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், 2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. மேலும் ஏழை மக்களுக்கான வீட்டுக் கடன் வட்டி மானியத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சகங் களுக்கிடையிலான குழு அளித்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப் பட்டது.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள நகர்ப் புறங்களில் வசிக்கும் குடிசைவாசிகள், குறைவான வருமானம் ஈட்டுவோர் உட்பட பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தர இந்தத் திட்டம் வழிவகுக்கும். இதில் அரசும் தனியார் துறையும் கூட்டாக இணைந்து செயல்படும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் பெறுவோருக்கு வட்டியில் சலுகை வழங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள 4,041 நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 500 முதல் தர நகரங்களில் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

மேலும் தேசிய நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளுக்கேற்ப ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.3 லட்சம் வரை மத்திய அரசு நிதி உதவி வழங்கும். இதன் மூலம் அடுத்த 7 ஆண்டுகளில் புதிதாக 2 கோடி வீடுகள் கட்டப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு வழங்கப்படும் வட்டி மானியம் 4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் அனுமதிக்கக்கூடிய ரூ.6 லட்சம் வீட்டுக் கடனுக்கு 10.5 சதவீத வட்டியில் 15 ஆண்டு காலத்துக்கு மாதாந்திர தவணைத் தொகை ரூ.6,632 ஆகிறது. இப்போது கடனுடன் இணைக்கப்படும் 6.5 சதவீத வட்டி மானியம் காரணமாக, மாதாந்திர தவணை ரூ.4,050 ஆக குறையும். இதனால் மாதத்துக்கு ரூ.2,582 மிச்சமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in