Published : 11 May 2014 11:00 AM
Last Updated : 11 May 2014 11:00 AM

இந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழிலாளர்கள்: ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் ஆடைத் தொழிலாளர்கள் கொத்தடிமை போல் நடத்தப் படுகிறார்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாரீஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம் என்ற அமைப்பு, ஆடைத் தொழிலாளர்களின் வேலை நிலைகள் மற்றும் மனித உரிமைச் சூழல்கள் குறித்த ஆய்வை இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மேற்கொண்டது.

தமிழ்நாடு, ஹரியானா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் தொழிலாளர்களின் தங்குமிடங்களீல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதைவைத்து ஒரு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

’விற்பனை நிலையங்களுக்கு பின்னால்: இந்தியாவின் ஆடைத் தொழிலாளர்களின் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில், தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனத்தின் பிரதிநிதிகளான மிஷேல் கிஷேகேட்டர், மரியான் காடியர், திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர் நலனுக்கான ’சேவ் ’அமைப்பின் மேலாண் இயக்குனர் அலோயிசியஸ் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்கள் முன்னிலையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

நிலையற்ற வேலை சூழல், மிகை வேலை நேரம், குறைந்தபட்ச கூலி போன்றவை இந்திய ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் உள்ள சுமங்கலி போன்ற திட்டங்களின் கீழ் வேலை செய்யும் முறையானது கொத்தடிமைக்கான அம்சங்களை கொண்டது. பலரும் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். கட்டுப்பாட்டுக்கும், கட்டாயப்படுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

திட்டுவது மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு இளம்பெண்கள் ஆளாக்கப்படு கிறார்கள். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தலித்துகள் மோசமான வேலை சூழலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும், தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அரசு தொழிலாளர் துறையின் ஆய்வாளர்களின் கண்காணிப்பு போதுமானதாக இல்லை.

தொழிலாளர் உரிமைகளை மதிப்பது, உரிமைகளை கேட்டு பெறுவதற்கான தளங்களை உருவாக்குவது போன்றவை ஸ்பின்னிங் மில் உட்பட எல்லா தளங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x