2,050 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி: லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை வாங்குகிறது இந்தியா

2,050 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி: லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை வாங்குகிறது இந்தியா
Updated on
1 min read

இந்திய அரசியலமைப்பு சட்டத் தின் சிற்பியும் தலித் உரிமைப் போராளியுமான டாக்டர் அம்பேத்கர், லண்டனில் படித்த போது வசித்த வீட்டை விலைக்கு வாங்கி அவரது நினைவிடமாக மாற்ற மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.

வடக்கு லண்டன் பகுதியில் உள்ள சாக் பார்ம் பகுதியில் உள்ள பசுமை மரங்கள் நிறைந்த கிங் ஹென்ரி சாலையில் இந்த வீடு அமைந்துள்ளது. கடந்த 1921-22-ம் ஆண்டில் லண்டன் பொருளாதார கல்லூரியில் படித்த அம்பேத்கர், இந்த வீட்டில் தங்கியிருந்தார் என நீல கல்வெட்டு ஒன்று தெரி விக்கிறது.

லண்டன் நகரின் மிக முக்கிய பகுதியில், 2,050 சதுர அடி பரப்பளவில், 6 படுக்கை அறைகள், 3 தளங்களைக் கொண்ட இந்த வீடு கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதை அறிந்த மகாராஷ்டிர அரசு இந்த வீட்டை வாங்க முடிவு செய்தது. இதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து ரூ.40 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை வாங்குவதற்கான ஏற்பாடுகளை லண்டனில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவர் செய்து வருகிறார். இந்தத் தகவலை அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

விலைபேசப்படும் இந்த வீட்டில் ஏற்கெனவே டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், சமூக நீதிக்கான இந்தியப் போராளி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நினைவு கல்வெட்டு உள்ளது. சில முக்கிய சீரமைப்புப் பணிகள் முடிந்ததும் இந்தக் கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக மகாராஷ்டிர அரசு திறந்துவிடும்.

இந்தக் கட்டிடத்தின் ஒரு தளத்தில் பிரிட்டனுக்கு படிக்க வரும் இந்திய மாணவர்கள் தற்காலிகமாக தங்கிக்கொள்ள அனுமதிப்பது பற்றியும் பரிசீலிக் கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in