

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக 4 வாரம் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் 3 வாரங்களிலேயே முடிந்துவிடும்.
முன்னதாக, ஜூலை 20-ம் தேதி இந்த கூட்டத்தொடரை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஈத் பண்டிகை ஜூலை 18 அல்லது 19-ல் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூலை 21-ம் தேதி மழைக்கால கூட்டத்தை தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
கூட்டத்தொடருக்கான தேதியை நாடாளுமன்ற விவகார அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழுவின் தலைவராக உள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட பல்வேறு மூத்த அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஐபிஎல் ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடி, போர்ச்சுகல் செல்வதற்கு பயண ஆவணம் பெற, பிரிட்டனிடம் பேசி சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி அவையில் பெரும் அமளி ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தையும், ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையிலெடுக்க திட்டமிட்டுள்ளன.
லலித் மோடி விவகாரத்தில் புகாருக்குள்ளாகியுள்ள வெளி யுறவு அமைச்சர் சுஷ்மாவும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் ராஜினாமா செய்யாவிட்டால் கூட்டத்தொடரில் அலுவல்களை நடக்க விடாமல் முடக்குவோம் என்று காங்கிரஸ் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
ஆனால் சுஷ்மா, வசுந்தராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக இருவரும் லலித் மோடி விவகாரத்தில் தவறு செய்யவில்லை என்றும் அவர்கள் பதவி விலக அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத், லலித் மோடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் அவையில் எந்த அலுவலும் நடக்காது என்று எச்சரித்திருக் கிறார்.
லோக்பால், லோக் ஆயுக்தா சட்ட திருத்தம், ரயி்ல்வே (திருத்த) மசோதா, நீர்வழி மசோதா, சரக்கு சேவை வரி மசோதா, நில கையகப்படுத்துதல் மசோதா திருத்தம், உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதிக்குள் நிறைவேற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது அரசு. ஆனால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவருகின்றன.
மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் 35 அமர்வுகள் நடந்தன. கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை அமர்வுகள் நடந்தது இப்போதுதான் என்பது குறிப் பிடத்தக்கது.. மாநிலங்களவையில் 32 அமர்வுகள் நடந்தன.
கடந்த கூட்டத்தொடரில் மக்களவையில் 6 மணி நேரம் 54 நிமிடங்கள் அமளி காரணமாக வீணாகின. உணவு இடைவேளை ரத்து , கூடுதலாக 42 மணி நேரம் 41 நிமிடம் அவை செயல்பட்டு இந்த இழப்பு சரி செய்யப்பட்டது. மாநிலங்களவையில் 18 மணி 28 நிமிடம் இழப்பு அடைந்தது. அதுவும் கூடுதல் நேரம் செயல்பட்டு சரி செய்யப் பட்டது.
ஒவ்வொரு ஆண்டிலும் நாடாளுன்றத்தில் குறைந்தது 100 அமர்வுகளை நடத்துவது என்பதில் அரசு முனைப்பாக உள்ளது.