

இந்திய வீரர்கள் 18 பேரை சுட்டுக் கொன்ற வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது இந்தியா. அதுவும் வழக்கத்துக்கு மாறாக மியான்மர் நாட்டுக்குள்ளேயே புகுந்து அங்கு பதுங்கியிருந்த 38 தீவிரவாதிகளை ஒழித்துள்ளது. இது 5 நாட்களுக்கு முன்பே சரியாக திட்டமிட்டு கச்சிதமாக முடிக்கப்பட்ட ‘ஆபரேஷன்’ என்று தெரியவந்துள்ளது.
மணிப்பூர் எல்லையில் சந்தெல் மாவட்டத்தில் வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் கடந்த வியாழக் கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்ட னர். மியான்மர் எல்லைக்குள் பதுங்கிக்கொண்டு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம் தான். ஆனால், இந்த முறை அப்படி சாதாரணமாக விட்டுவிடவில்லை இந்தியா. கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடந்த உடனே, தீவிர வாதிகளை ஒழிப்பதற்காக ‘ஆபரேஷன்’ தொடங்கி விட்டது. இதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோ சகரும், ராணுவ தளபதியும் முழு மனதாக ‘ஓகே’ சொல்லி விட்டனர். அவ்வளவுதான்.. 70 இந்திய வீரர்களுடன் ஹெலிகாப்டர்கள் மியான்மர் நாட்டுக்குள் நேற்று முன்தினம் அதிரடியாக புகுந்தன. அங்கு பதுங்கியிருந்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகளின் முகாம்களை அடித்து நொறுக்கின. இதில் 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
‘‘மியான்மருக்குள் இந்திய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தியது உண்மைதான். இதற்கு பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார். இது துணிச்ச லான நடவடிக்கை. ஆனால், இந்த நேரத்தில் தேவையான நட வடிக்கை’’ என்று உறுதிப்படுத்தி னார் மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய உடனேயே மியான்மருக் குள் நுழையும் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி வங்க தேச பயணம் மேற்கொண்டபோது, அவருடன் செல்லவேண்டிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மணிப்பூரில் முகாமிட்டார். அதேபோல், ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் தனது இங்கிலாந்து பயணத்தை ரத்துசெய்து விட்டு மணிப்பூர் விரைந்தார்.
அதன்பின் திட்டங்கள் விறுவிறு வென வகுக்கப்பட்டன. 21 பாரா ரெஜிமென்ட் (சிறப்பு படை) வீரர்கள் தயார் செய்யப்பட்டனர். விமானப் படையின் எம்ஐ-17 ரக ஹெலி காப்டர்கள் வரைவழைக்கப்பட் டன. மியான்மர் எல்லைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அதி காலை 3 மணிக்கு புகுந்தது இந்திய ராணுவம். அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகளின் 2 முகாம்கள் அழிக்கப்பட்டன என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. 40 நிமிடங்களில் இந்திய ராணுவம் தனது பணியை வெற்றிகரமாக முடித்தது.
முன்னதாக மியான்மருடன் தூதரக ரீதியாக யார் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் முறைப் படி இந்திய அரசு சார்பில் சம்பந்தப் பட்டவர்கள் பேசிவிட்டனர். இந்தியாவின் நடவடிக்கைக்கு மியான்மர் ஒன்றும் சொல்லவில்லை.
‘‘மியான்மருக்குள் நுழைந்தது போல பாகிஸ்தானுக்குள்ளும் நுழைந்து தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துமா’’ என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு இணை அமைச்சர் ரத்தோர் கூறும் போது, ‘‘பாகிஸ்தான் உட்பட மற்ற எல்லா நாடுகளுக்கும் இது ஓர் எச்சரிக்கைதான்.
தீவிரவாதிகளை இந்தியா வுக்கு எதிராக தூண்டி விட்டால் இப்படித்தான் நடவடிக்கை இருக் கும். தீவிரவாதிகள் என்பவர்கள் தீவிரவாதிகள். அவர்களுக்கு வேறு அடையாளம் கிடையாது. தேவைப் பட்டால் நாங்கள் தாக்குதல் நடத்து வோம்’’ என்று திட்டவட்டமாக கூறி யுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு சீனா ஆதரவு அளித்து வருவதாக பல ஆண்டுகளாக இந்தியா புகார் கூறி வருகிறது. உல்பா தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் பரேஷ் பரூவா சமீபத்தில் சீனாவின் யுனான் மாகாணத்தில் தஞ்சம் அடைந்துள்ளதே இதற்கு உதாரணம். எனவே, மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல், சீனாவுக்கும் ஒரு முக்கிய தகவலாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இதற்கு முன்பே கடந்த 1995-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் ‘கோல்டன் பேர்ட்’ என்ற பெயரில் இந்திய - மியான்மர் நாடுகள் தீவிர வாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 118 பேர் கைது செய்யப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான ஆயுதங் கள், கிலோ கணக்கில் வெடி மருந்துகளை கைப்பற்றினர். ஆனால், ஜனநாயகத்துக்காக போராடி வரும் எதிர்க்கட்சித் தலை வர் ஆங் சாங் சூகிக்கு, அமைதிக் கான நேரு விருதை இந்தியா வழங்கிய பிறகு, கூட்டு நடவடிக் கையை மியான்மர் நிறுத் திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.