

‘காப்’ பஞ்சாயத்துகளை கிண்டல் செய்து தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப் படத்துக்கு உ.பி.யில் எதிர்ப்பு எழுந் துள்ளதை தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹரியாணா மற்றும் மேற்கு உ.பி.யில் ‘காப்’ பஞ்சாயத்து எனப் படும் கட்டை பஞ்சாயத்துகள் செயல் படுகின்றன. காவல்துறை மற்றும் நீதி மன்றங்களை மதிக்காத இந்த பஞ்சாயத்துகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கின்றன. காதலர்கள் மற்றும் பாலியல் குற்றங் கள் மீது விசாரணை நடத்தி இவை அதிரடி தீர்ப்புகள் வழங்கி சர்ச்சை யில் சிக்கி வருகின்றன. இவை வழங்கிய தீர்ப்பினால் பல கவுரவக் கொலைகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் இவற்றின் செயல் பாடுகளை எடுத்துக்காட்டும் வகை யில் வினோத் காப்ரி என்ற முன்னாள் பத்திரிகையாளர் ‘மிஸ் டனக்பூர் ஹாஜிர் ஹோ’ எனும் பெயரில் ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள் ளார். இந்த ஆவணப்படம் இந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியா னது. இதன் கதையில், எருமையை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதன் நாயகன் மீது குற்றம் சாட்டப் பட்டு ‘காப்’ பஞ்சாயத்து முன் நிறுத் தப்படுகிறான். இதில் நாயகனுக்கு தண்டனையாக அந்த எருமையை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பஞ்சாயத்து தீர்ப்பளிக்கிறது. இதுபோன்ற பல காட்சிகள், ‘காப்’ பஞ்சாயத்துகளை கிண்டல் செய்வதாக அப்படத்தில் உள்ளன.
முன்னதாக இத்திரைப்படம் பற்றி அறிந்த, முசாபர்நகர் மாவட்டம், பைசானி கிராமத்தின் அஹலாவாத் எனும் ‘காப்’ பஞ்சாயத்து கடந்த 13-ம் தேதி கூடியது. இதில், இப்படத்தின் இயக்குநரை உயிருடனோ அல்லது தலையை துண்டித்தோ கொண்டு வருவோருக்கு 51 எருமைகள் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தது. மேலும் முசாபர்நகர் மாவட்டத்தில் இப்படத்தை திரையிடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இச்செய்தி மறுநாள் அப்பகுதி இந்தி நாளேடுகளி லும் வெளியாகி சர்ச்சைகள் எழுந்தன.
இப்படத்தின் இயக்குநர் வினோத் காப்ரி மும்பையில் வசிக்கிறார். ஆனால் இவரது குடும்பத்தினர் முசாபர் நகரில் இருந்து சுமார் 125 கி.மி. தொலைவில் உள்ள நொய்டாவில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் உ.பி. அரசுக்கு வினோத் காப்ரி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “உ.பி.யின் முசாபர்நகரில் உள்ள ‘காப்’ பஞ்சாயத்துகள் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கொலைமிரட்டல் விடுத்துள்ளன. எனது படத்தை உ.பி.யில் அனுமதிக்க மறுக்கின்றன. இவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் வினோத் காப்ரி கூறும்போது, “ராஜஸ் தான் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. இதற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கடந்த ஜூன் 14-ல் சிறு மாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசால் தணிக்கை சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் எனது படத்துக்கு தடை விதிக்க ‘காப்’ பஞ்சாயத்துகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்றார்.
வினோத் காப்ரியின் இந்த ஆவணப்படம் இந்த ஆண்டு மத்திய அரசால் சமூகத்துக்கான சிறந்த திரைப்படம் என விருது பெற்றுள்ளது. இதில், அன்னு கபூர், ரவிகிஷண், ஓம்புரி, சஞ்சய் மிஸ்ரா, ஹிர்ஷிதா பட் ஆகியோர் நடித்துள்ளனர். இப் படத்தின் ‘டிரெய்லர்’ வெளியான 3 நாட்களில் அதை இணையதளத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.
இப்படம் அமிதாப்பச்சன், இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி ஆகியோரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுவரை சர்ச்சைகளில் சிக்கிய பிற படங்களுக்கு மாறாக, உ.பி.யின் 1 மாவட்டத்தில் மட்டும் இப் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.