Last Updated : 03 Jun, 2015 07:29 PM

 

Published : 03 Jun 2015 07:29 PM
Last Updated : 03 Jun 2015 07:29 PM

மேகி விற்பனைக்கு 15 நாள் தடை: டெல்லி அரசு அதிரடி

மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு டெல்லியில் 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளிலும், விநியோகஸ்தர்களிடமும் உள்ள மேகி நூடுல்ஸ் இருப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அதனை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்துக்கு டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே, இந்தியாவில் பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவற்றின் தயாரிப்புகளில் ஒன்றுதான் மேகி நூடுல்ஸ். இதில் மோனோசோடியம் குளூடாமேட் என்ற ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்பட்டுள்ளதாகவும் இது உடல் நலத்துக்குத் தீங்கானது என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது. உத்தரப் பிரதேசத்தில்தான் இந்த புகார் முதலில் எழுந்தது.

இதையடுத்து மேலும் பல மாநிலங்களும் மேகி நூடுல்ஸை தர ஆய்வுக்கு அனுப்பியுள்ளன. மத்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணை யமும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தர ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று, மேகி விற்பனைக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் கூறியதாவது: டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி, தர பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகி விற்பனைக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. மேகி நூடுல்ஸில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப் பட்டால், உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் நெஸ்லே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள மேகி மசாலாவில் (டேஸ்ட் மேக்கர்) அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஈயம் கலந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேற்று முன்தினமே டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் பல்வேறு இடங்களில் இருந்து 13 மேகி மசாலா மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் 10 பாக்கெட்டுகளில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பாக்கெட்டுகளில் மோனோசோடியம் குளூடாமேட் ரசாயன உப்பு உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விவரம் பாக்கெட்டில் குறிப்பிடப்படவில்லை. இதுவும் உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டப்படி தவறுதான் என்று அதிகாரிகள் கூறினர்.

டெல்லியை அடுத்து வேறு பல மாநிலங்களிலும் மேகிக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழகம் பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

மத்திய அரசு புகார்

இதனிடையே, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் மத்திய அரசு தாமாகவே முன்வந்து நெஸ்லே நிறுவனம் மீது மேகி விவகாரத்தில் புகார் செய்துள்ளது. 30 வருட பழமைமிக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள ஒரு பிரிவின்கீழ் முதல்முறையாக இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துரித உணவே கேடுதான்

இதுபற்றி உணவு, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:

மேகி நூடுல்ஸின் தரத்தில் குறைபாடு இருப்பதாக கூறப்படுவது தீவிரமான பிரச்சினையாகும். இதுபற்றி தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கும். என்ன நடவடிக்கையை ஆணையம் எடுக்கும் என்பதை இப்போ தைக்கு சொல்லமுடியாது. துரித உணவுப் பொருட்களை உண்ணும் பழக்கம் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்றார் பாஸ்வான்.

ராணுவம் உத்தரவு

ராணுவ வீரர்கள் மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கும்படி ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை ராணுவ கேன்டீன்களில் மேகி நூடுல்ஸை விற்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, மேகி நூடுல்ஸ் தரமிக்கதாக இருப்பதாக மகாராஷ்டிரா, கோவா அரசுகள் அறிவித்துள்ளன. வாசனை தரும் பொருளாக சேர்க்கப்படும் சில ரசாயன உப்புகள் உள்ளிட்டவை கூட அதில் இருப்பதாக ஆய்வுக்கூட சோதனையில் தெரியவரவில்லை என்று கோவா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமிதாப் கருத்து

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய திரையுலக நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை யடுத்து அமிதாப், மாதுரி, பிரீத்தி ஜிந்தா மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று மும்பையில் கருத்துத் தெரிவித்த அமிதாப் பச்சன், இந்த விஷயத்தில் சட்டம் என்ன கூறுகிறதோ அதன்படி நடப்பேன் என்று கூறியுள்ளார்.

நெஸ்லே விளக்கம்

“எங்கள் நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு ஏற்றது தான். இதனை எங்கள் சொந்த ஆய்வகத் திலும், வெளி ஆய்வகத்திலும் சோதித்து உறுதிபடுத்தியுள்ளோம்” என்று நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x